நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இருவரை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அனுமதி

19 0

அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று பாராளுமன்றத்தில் கூடியது.

இதன்போது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிகாரவை மீண்டும் நியமிப்பதற்கும், ஈ.ஏ.ஜீ.ஆர் அமரசேகரவைப் புதிதாக நியமிப்பதற்கும் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரை அரசியலமைப்புப் பேரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

அத்துடன், அரசியலமைப்பின் 41 ஆ பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரி பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கு அரசியலமைப்புப் பேரவை தீர்மானித்திருப்பதுடன், இவ்வார இறுதி பத்திரிகைகளில் இதற்கான பிரசாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், இதற்கு அமைய கடந்த முறை பிரசுரிக்கப்பட்ட விளம்பரங்களை இவ்வார இறுதிப் பத்திரிகைகளில் மீண்டும் மீள்பிரசுரம் செய்வதற்கும் தீர்மானித்தது. விண்ணப்பம் குறித்த மாதிரிப் படிவம் பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி முன்னர் தீர்மானிக்கப்பட்டது போன்று 2023 பெப்ரவரி 15ஆம் திகதியாகத் தொடர்ந்தும் பேண இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர்  தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்  நிமல் சிறிபால.த சில்வா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத அங்கத்தவர்களான கலாநிதி பிரதாப் இராமானுஜம், கலாநிதி தில்குஷி அனுல விஜேசுந்தர, கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர்களான கபிர் ஹஷீம் மற்றும்  சாகர காரியவசம் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணத்தினால் இதில் கலந்துகொள்ள முடியாது என அறிவித்திருந்தனர்.