பூகம்பம் – தொப்புள்கொடி துண்டிக்கப்படாத நிலையில் சிரியாவில் குழந்தை உயிருடன் மீட்பு

109 0

பூகம்பத்தினால் முற்றாக அழிந்துபோயுள்ள சிரியாவின் வடபகுதியில் இடிபாடுகளிற்குள் இருந்து பிறந்து சில மணிநேரங்களேயான குழந்தையொன்றை மீட்பு பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.

பேரழிவு நிகழ்ந்த சில நிமிடங்களின் பின்னர் குழந்தையை பிரசவித்துவிட்டு தாய் உயிரிழந்துள்ளார்.குழந்தையின் தந்தை நான்கு சகோதரர்களும் முன்னாதாக பூகம்பத்தில் பலியாகியுள்ளனர்.

ஜின்டேய்ரிஸ் பகுதியில் இடிபாடுகளிற்குள் இருந்து புழுதிபடிந்த குழந்தையொன்றை நபர் ஒருவர் காப்பாற்றிச்செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அப்பிரினிற்கு அருகில் உள்ள மருத்துவமனையொன்றை சேர்ந்த வைத்தியர் ஒருவர் குழந்தை நல்லநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜின்டேய்ரிஸ் நகரில் தரைமட்டமாகியுள்ள 50 கட்டிடங்களில் ஒன்றில் குழந்தையின் பெற்றோர் வாழ்ந்துவந்துள்ளனர்.

கட்டிடம் தரைமட்டமானதை அறிந்ததும் அந்த பகுதிக்கு விரைந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்தவேளை சத்தம் கேட்டது என அவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார்.

தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் குழந்தையை பார்த்தோம் நாங்கள் அதனை துண்டித்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவேளை அந்த பெண் குழந்தையின்  உடல் முழுவதும் சிராய்ப்புகள் காயங்கள் காணப்பட்ட என  மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்- ஆபத்தான நிலையிலேயே கொண்டுவந்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் குளிர் காரணமாக உடல்வெப்பநிலை குறைவடைந்த நிலையில் குழந்தையை கொண்டுவந்தார்கள் நாங்கள் உடல்வெப்பநிலையை அதிகரித்து கல்சியம் வழங்கினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குழந்தையின் குடும்பத்தினருக்கு உறவினர்கள் ஒன்றாக மரணச்சடங்கை நடத்தியுள்ளனர்.