அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை

125 0

இலங்கை மின்சார சபைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை அரசியல் அழுத்தங்களினால் மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை.பதவி வகிக்கும் வரை ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைய செயற்படுவேன் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இரவு 07 மணிக்கு பிறகு மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கிய ஆலோசனையை இலங்கை மின்சார சபை செயற்படுத்தவில்லை.

பரீட்சை காலத்தில் மின்விநியோகம் துண்டிக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,

இதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமை மீறல் செயற்பாடாக கருதி மின்சார துறைசார் தரப்பினரை ஆணைக்குழுவிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டது.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் குறிப்பாக இரவு வேளைகளில் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய ஆலோசனைகளை இலங்கை மின்சார சபை செயற்படுத்தவில்லை.மின்சார சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறது.

இலங்கை மின்சார சபைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தோம்,இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்த மொஹான் சமரநாயக்க,யூ.ஏ.விக்கிரமசிங்க ஆகியோர் என் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பதவி விலகினார்கள்.

இலங்கை மின்சார சபைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கினை அரசியல் அழுத்தங்களினால் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் தற்போது குறிப்பிடுகிறார்கள்.

ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்லஸ் நாயகக்கார கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விபரங்கள் ஏதும் அவருக்கு தெரியாது,ஆனால் அவரும் வழக்கை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு தற்போது குறிப்பிடுகிறார்.

இவர்கள் ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைய செயற்படுகிறார்களா,அல்லது இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளார்களா என்பதை நான் அறியவில்லை.

மின்விநியோக துண்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தற்போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்பு தெரிவிக்கும் நிலை தற்போது காணப்படுகிறது.

எனக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய குற்றப்பத்திரத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அவரின் குற்றப்பத்திரத்தை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.பதவியில் இருக்கும் வரை ஆணைக்குழுவின் சட்டத்தி;ற்கு அமைய செயற்படுவேன் எக்காரணிகளுக்காகவும் அரசியல் அழுத்தங்களுக்கு  அடிபணிய போவதில்லை என்றார்.