ஒவ்வொரு நிமிடத்தையும் பீதியுடன் கழிக்கிறோம் – துருக்கியில் ஆந்திர தொழிலாளர்கள் கதறல்

73 0

 துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த 2 நாட்களாக தொடர் பூகம்பங்களால் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயங்கள் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கியில் அதானா நகரில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், கவிடி, சோம்பேட்டா, கஞ்சிலி பகுதியை சேர்ந்த சிலர் கட்டிட கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின் றனர். தற்போது அங்கு தொடர் பூகம்பம் ஏற்படுவதால், இவர்கள் அனைவரும் பீதியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பதாக அவர்களின் குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

குருதேவ் என்பவர் கூறும்போது, நாங்கள் துருக்கி அதானாநகருக்கு அருகில் வசித்து வருகிறோம். நாங்கள் இருக்குமிடத்திற்கும் சிரியா நாட்டின் எல்லைக்கும் சுமார் 300 கி.மீ தூரம் இருக்கும்.திங்கட்கிழமை அதிகாலை சுமார் 4.15 மணிக்கு முதன்முறையாக பூகம்பம் வந்தது. அப்போது நாங்கள் அனைவரும் ஒரு கண்டைனரில் தூங்கி கொண்டிருந்தோம். பூகம்பத்தை உணர்ந்த நாங்கள் என்னவோ நடக்கிறது என்பதை உணர்ந்து எழுந்து வெளியே வந்து பார்த்தோம். எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள், ஓலங்கள், கதறல்கள் கேட்டன. கட்டிடங்கள் சரிந்து விழுந்து பார்ப்பதற்கே போர்க்களம் போல் அப்பகுதி காணப்பட்டது. இதனை அறிந்து எங்களின் உறவினர்கள் வீடியோ கால் செய்து பேசினர். நாங்கள் பணி செய்யும் நிறுவனம் எங்களை மிக நன்றாக கவனித்துக் கொள்கிறது. இன்னமும் ஒரு வாரம் வரை பணிக்கு வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் கூறியதாவது, நாங்கள் தூங்கி கொண்டிருந்த போது பூகம்பம் வந்தது. சுமார் ஒரு நிமிடம் வரை அது நீடித்தது. மீண்டும் மீண்டும் பூகம்பம் வருவதால், நாங்கள் தூங்குவதே கிடையாது. 24 மணி நேரமும் பீதியிலேயே இருக்கிறோம் என கூறியுள்ளார்.