ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

76 0

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. புதிய கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்வு இம்முறை மிகவும் எளிமையான முறையில் இடம்பெறவுள்ளது.

வைபவ ரீதியான நிகழ்வு ஒத்திகை நேற்று திங்கட்கிழமை பாராளுமன்ற கட்டத்தொகுதி வளாகத்தில் இடம்பெற்றது. கோட்டை ஜனாதிபதி மகளிர் பாடசாலையின் மாணவிகள் உட்பட பலர் இந்த ஒத்திகையில் பங்குப்பற்றினர்.

அரசியலமைப்பின்  33ஆம் உறுப்புரையின் (அ) மற்றும் (ஆ) உப பிரிவுகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து,அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தரும் நிகழ்வை மிக எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.இதற்கமைய புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது ஜனாதிபதியின் வருகையின் நிமித்தம் பாரம்பரியமாக இடம்பெறும் மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல்,வாகனத் தொடரணி ஆகிய நடவடிக்கைகள் ஏதும் இம்முறை இடம்பெறாது.

சபாநாயகர் மற்றும் அவரது பரியாரின் வருகையை தொடர்ந்து பிரதமர் பாராளுமன்றத்திற்கு வருகை தருவார்,இதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதல் பெண்மணியின் வருகை இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் பாராளுமன்றத்தின் பிரதான வாயிலில் இருந்து ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரை வரவேற்பார்கள்.படைக்கல சேவிதர்,பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஜனாதிபதியை பாராளுமன்ற  கட்டத்திற்குள் அழைத்துச் செல்வார்கள்.

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலிற்கு அருகே பாடசாலை மாணவிகள் ஜயமங்கல கீதம் இசைப்பார்கள்.இதனை தொடர்ந்து பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய பிரதி படைக்கல சேவிதர் செங்கோலை கையில் ஏந்தியவாறு படைக்கல சேவிதல்,ஜனாதிபதி,சபாநாயகர் ,செயலாளர் ஆகியோர் வரிசைப்படி பாராளுமன்ற சபா மண்டபத்திற்குள் செல்வார்கள்.

ஜனாதிபதி அக்கிராசனத்தில் அமர்ந்து சபைக்கு தலைமை தாங்குவார். பாராளுமன்ற குழுநிலையின் போது அமரும் கீழ் பகுதியில் உள்ள ஆசனத்தில் சபாநாயகர் செயலாளர் குழுவினருடன் அமர்வார்.

இதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி ஆற்றுவார்.இதனை தொடர்ந்து பாராளுமன்ற அமர்ந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை நாளை (புதன் கிழமை) வரை ஒத்திவைத்தார்.

நிறைவடைந்த ஆறு மாத காலத்திற்குள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் இருமுறை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.