சிசிடிவி காணொளியில் சிக்கிய ஆதாரம்!

85 0

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், இலங்கையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகருமான 45 வயதான ஒனேஷ் சுபசிங்க நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஜகார்த்தா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனது பிரேசிலிய மனைவி, மகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் இந்தோனேசியாவில் விடுமுறையில் இருந்தபோது மர்மமான முறையில் ஒனேஷ் சுபசிங்க உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுபசிங்க தனது பிரேசிலிய மனைவி, அவரது 4 வயது மகள் மற்றும் மற்றொரு அடையாளம் தெரியாத பிரேசிலியப் பெண் ஆகியோருடன் கடந்த ஜனவரி 20ஆம் திகதி ஜகார்த்தாவிற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது தொழில் நிமித்தமாக அந்நாட்டில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தனது அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஆனால் கடந்த ஜனவரி 31ம் திகதி முதல் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பினை அங்கிருந்த ஊழியர்கள் திறந்து பார்த்தபோது, ​​அவரது சடலம் அங்கு காணப்பட்டுள்ளது.

இதன்போது குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட போது சுபசிங்காவின் மனைவி, மகள் மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஆகியோர் செவ்வாய்கிழமை வாசலில் ‘தொந்தரவு செய்யாதீர்கள்’ என்ற பலகையை வைத்துவிட்டு அந்த குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.’

எனினும், அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும், நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.