அரசியல் தீர்வு கிடைக்காவிடின் தமிழர் தாயகம் பறிபோய்விடும்!-பிறந்தநாளில் சம்பந்தன்

103 0

“அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் – சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். எனவே, உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

திடீர் சுகவீனமுற்று அண்மையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், நேற்றுமுன்தினம் (03) வீடு திரும்பிய நிலையில் இன்று  90 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில், அவரை இன்றிரவு தொடர்புகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர்:- ஐயா! எப்படி இருக்கின்றீர்கள்?

சம்பந்தன்:- நான் நலமாக இருக்கின்றேன் தம்பி.

ஊடகவியலாளர்:- பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.

சம்பந்தன்:- நன்றி தம்பி.

ஊடகவியலாளர்:- ஐயா! இன்றைய நன்னாளில் தமிழ் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

சம்பந்தன்:- இந்தப் புதிய வருடத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயத்தில் நாம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

அரசியல் தீர்வு தொடர்பான எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் புதிய அரசமைப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அதைப் பெறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் இல்லை.எல்லோரும் சேர்ந்து அந்தக் கருமத்தை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் – சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். அதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

அரசியல் தீர்வு கிடைத்தால் எங்களுடைய பிரதேசங்களின் நிர்வாகங்களை நாங்களே பாரமெடுத்து அவற்றை நடத்தக்கூடிய வழியேற்படும். எனவே, அரசியல் தீர்வு என்பது எங்களுடைய நீண்டகால இலக்கு மாத்திரம் அல்ல எங்களுடைய வாழ்வும் அதில்தான் தங்கியுள்ளது – என்றார்.