வேலூரில் ஈ.வே.ரா. அரசு பள்ளியில் படித்த வாணிஜெயராம்- கரும்பலகையில் எழுத்து வடிவில் பதிவு செய்த பழைய நினைவுகள்

81 0

சினிமா பின்னணி பாடகிகளில் தனக்கென தனி முத்திரையை பதித்த வாணி ஜெயராம். 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடல் மூலமாக, மக்களின் மனங்களை கொள்ளை கொண்டு தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டவர்.

அதோடு, சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர். இவர், வேலுார் கொசப்பேட்டை நல்லெண்ண பட்டறை தெருவில், தன் சிறு வயதில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள ஈவெரா அரசு பள்ளியில் படித்தார்.

கலைவாணி என்ற பெயருடன் தன் ஆரம்பக்கல்வியை பயின்றவர், பின்னாளில் இசைக்குயில் வாணி ஜெயராமாக அழைக்கப்பட்டார். தான் தொடக்க கல்வி படித்த பள்ளியை நினைவில் கொண்டிருந்த வாணிஜெயராம், 2015-ம் ஆண்டு பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது, பள்ளி வளாகத்தில் விளையாடிய இடங்கள், தான் படித்த வகுப்பறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, தன் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

அதோடு தான் படித்த வகுப்பறையில் உள்ள கரும்பலகையிலும், பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு ஆசிரியர்களுடன் குரூப் படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார். மக்களின் மனதை தன் இனிய குரலால் மயக்கிய கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைந்தாலும், இந்த பள்ளியில் படித்த அவரின் சிறப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும்.