ஏமாற்றும் பொறுப்புக்கூறல்!

149 0

“தற்போது  75 ஆவது சுதந்திர தினப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ள  ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அப்பழுக்கற்ற சேவையாற்றிய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ‘விஷிஷ்ட சேவா விபூஷனய பதக்கம்’, வழங்கப்பட்ட பின்னர் தான், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்கா பயணத்தடைகளை அறிவித்தது”.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர், விக்டோரியா நுலண்டுடனான சந்திப்பு முதலாவது.

ஆயுதப் படைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றிய 77 அதிகாரிகளுக்கு விஷிஷ்ட சேவா விபூஷனய பதக்கங்களையும், முக்கிய தளபதிகளுக்கு 75 ஆவது ஆண்டு சுதந்திர தின பதக்கங்களையும் வழங்குகின்ற நிகழ்வு இரண்டாவது.

ஆயுதப் படைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக சிறப்பாக பணியாற்றிய- அப்பழுக்கற்ற சேவையாற்றிய லெப்டினன்ட் கேணல் தரத்துக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்குத் தான் விஷிஷ்ட சேவா விபூஷனய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு கடந்த முதலாம் திகதி 75 ஆவது சுதந்திர தினப்பதக்கத்தை ஜனாதிபதி அணிவித்தார்.

இலங்கையின் ஆயுதப் படைகளிலேயே அதிகபட்சமாக 20 பதக்கங்களைப் பெற்ற அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

விஷிஷ்ட சேவா விபூஷனய பதக்கத்தை 2015ஆம் ஆண்டிலேயே அவர் பெற்று விட்டார். அப்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்திருந்தார்.

அப்பழுக்கற்ற சேவையாற்றிய அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்ற ‘விஷிஷ்ட சேவா விபூஷனய பதக்கம்’, ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட பின்னர் தான், 2020ஆம் ஆண்டு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்கா பயணத் தடைகளை அறிவித்தது.

கனடாவும் கூட அவருக்கு எதிராக, தடைகளை விதிப்பதற்குத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கனவே கனடா, முன்னாள் ஜனாதிபதிகளாக மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, கடற்படை அதிகாரியான கொமாண்டர் சந்தன ஹெற்றியாராச்சி, முன்னாள் இராணுவ அதிகாரியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு தடைகளை அறிவித்திருக்கிறது.

இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களைப் புரிந்ததாக குற்றம்சாட்டப்படும், ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை அறிவிக்க வேண்டும் என கனடாவுக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற  வேண்டிய இராணுவ அதிகாரிகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும், அமெரிக்கா, கனடாவைப் பின்பற்றி,  தடைகளை விதிக்க வேண்டும் என்று பிரித்தானியாவில் உள்ள அமைப்புகளும், பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரி வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியமும் கூட இவ்வாறான தடைகளை விதிக்கலாம் என்ற ஊகங்களும் இருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் தான், ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு மதிப்பு மிக்க மற்றொரு பதக்கத்தை அணிவித்திருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் விக்டோரியா நுலண்ட்டுடனான சந்திப்புக்குப் பின்னரே அவர் இந்தப் பதக்கங்களை அணிவித்திருந்தார்.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு உலக நாடுகளும் 14 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்ற போதும், ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அதில் கவனம் செலுத்தியதில்லை.

ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு 20 ஆவது பதக்கம் வழங்கிக கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, ஜெனிவாவில் நடந்து கொண்டிருந்த பூகோள கால மீளாய்வு அமர்வில், இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த அமர்வில் உரையாற்றிய நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையிலும் கூட, கடந்தகால மீறல்களுக்கப் பொறுப்புக்கூறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் அந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் இதுவரை புறக்கணித்து வந்திருக்கிறது.  குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய படை அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்கும், அவர்களுக்கு முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் கொடுப்பதிலேயுமே அக்கறை செலுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் விதிவிலக்காக இருக்கவில்லை. அவரது அரசாங்கத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முக்கியமான இரண்டு அதிகாரிகள் உயர் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் ஒருவர் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் ஜெனரல் கமல் குணரட்ண. இன்னொருவர் ஜெனரல் சவேந்திர சில்வா. இவர்கள் இருவரும் கோட்டாபய ராஜபக்ஷவின் செல்லப் பிள்ளைகளாக, இருந்து வந்தவர்கள். போர்முனையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். போர்க்குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்திருப்பவர்கள்.

இவர்களில் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. ஜெனரல் கமல் குணரட்ணவுக்கு அமெரிக்கா வீசா வழங்க மறுத்திருக்கிறது.

அண்மையில் இலங்கை கடற்படை, விமானப்படையுடன் இணைந்து அமெரிக்க கடற்படை பாரிய கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டது. ஆனால் அந்த நிகழ்வுகளில் இவர்கள் இருவரும் விருந்தினர்களாக அழைக்கப்படவில்லை. காரணம், அமெரிக்காவினால் தடை செய்யப்பட்டவர்கள், அமெரிக்க படையினர் பங்கேற்கும் நிகழ்வுகளில விருந்தினர்களாக அழைக்க முடியாது.

சில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடந்த, காரட் -2023 கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். அங்கரேஜ் கப்பல் வந்திருந்ததுடன், ஜப்பானில் இருந்து அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு விமானமான பி.ஏ-8 விமானமும் கொழும்பு வந்திருந்தது.

இவ்வாறானதொரு கூட்டுப் பயிற்சியில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகளை அமெரிக்கா அழைக்கவில்லை. பாதுகாப்புச் செயலாளராகவும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாகவும் இருந்தபோதும் அவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டனர்.

பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பதனால் மாத்திரமன்றி, பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறியதாலும் தான் இவ்வாறான நிலை காணப்படுகிறது.

போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதை அமெரிக்கா தனது மனித உரிமைகள் கொள்கையின் ஒரு அம்சமாக வைத்திருக்கிறது.

போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் கையெழுத்திட்டிருந்தார்.

அமெரிக்காவில் இருக்கும் எந்தவொரு நாட்டின் குடிமக்களையும், உலகில் எங்காவது இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக தண்டிக்க அமெரிக்க நீதித்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது இந்தச் சட்டம்.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரும், இலங்கையில் போக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் விடயத்தில் அமெரிக்கா நெகிழ்வுத்தன்மையுடன் செயற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளிக்காவிட்டாலும், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து இந்தப் பிரச்சினையை தீர்க்கப் போவதாக கூறியிருந்தார்.

இராணுவத் தளபதியை அழைத்து இதுபற்றிக் கருத்துக் கேட்டதாகவும், அவர் இராணுவம் மீதான குற்றச்சாட்டை போக்கிக்கொள்வதற்கு அது நல்ல வாய்ப்பாக அமையும் என்று பதிலளித்தார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தைக் காப்பாற்றுவதிலேயே அரசாங்கத்தின் முழுக் கவனமும் இருக்கிறது.

பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டிய தரப்பாக இருந்தாலும், இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த நிலைமை தான், சர்வதேச அரங்கில் இலங்கை நெருக்கடியை எதிர்கொள்வதற்கு காரணம்.

இவ்வாறான நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் பொறுப்புக்கூறலை உறுதி செய்கிறதோ இல்லையோ, இலங்கை அரசாங்கத்தின் மூலம் அதனை நிறைவேற்றலாம் என்பது கற்பனையாகவே தெரிகிறது.

சுபத்ரா