பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கைது

96 0

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரும் அவாமி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ரஷீத் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷேக் ரஷீத் அகமது கைது: பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரும் அவாமி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ரஷீத் அகமது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரது வாகனத்தில் இருந்து மது பாட்டிலும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஷேக் ரஷீத் அகமது போதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதுக்கான காரணம்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளரான இவர், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், இம்ரான் கானை கொலை செய்ய முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ராவல்பிண்டி நகர பொறுப்பாளர், ஷேக் ரஷீத் அகமதுவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் ஷேக் ரஷீத் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஷேக் ரஷீத் அகமது, இஸ்லாமாபாத்தில் உள்ள ஆபரா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படார். பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தனது கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேக் ரஷீத் அகமது, தான் எவ்வித குற்றத்தையும் இழைக்கவில்லை என்றும், இம்ரான் கானுக்கு ஆதரவாக இருப்பதால்தான் தான் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஷேக் ரஷீத் அகமதுவின் செய்தித் தொடர்பாளர், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷேக் ரஷீத் அகமதுவின் வீட்டில் இருந்துதான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும், நெடுஞ்சாலையில் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டிற்கு வந்த சுமார் 300 போலீசார் அதிரடியாக ரஷீத்தை கைது செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.