தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஐக்கியப்படுக!

95 0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஐக்கியப்பட்டு ஒன்று சேருமாறு ஐக்கிய அமெரிக்க தமிழ்ச் செயற்குழு (USTAG) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையிலுள்ள சகல தமிழ் கட்சி தலைவர்கள், பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் ஆகியோருக்கு ஐக்கிய அமெரிக்காவில் செயற்படும் ஐக்கிய அமெரிக்க தமிழ்ச் செயற்குழுவின் (USTamil Action Group – USTAG) தலைவர் அனன் பொன்னம்பலம் அனுப்பியுள்ள கடிதத்திலே மேலுள்ளவாறு
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எந்த விதிவிலக்குமின்றி, தமிழ் அரசியலில் ஒற்றுமை என்பது முற்றிலும் இன்றியமையாததாக இருக்கும் இவ்வேளையில், அதற்கு நேர்மாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது குறித்து, உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து துண்டாடப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுடைய ஐக்கியத்தை மீண்டும் நிறுவ முடியும் என்ற முன்மொழிவு, ஓர் ஆபத்தானதும் பொறுப்பற்றதுமான அனுமானமாகும். தனித்துச் செல்லும் ஒவ்வொரு தமிழ்க் கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு, ஒற்றுமை என்ற நோக்கத்துக்காகப் பேசுவதற்கு எந்தத் தமிழ்ப் பிரதிநிதித்துவமும் இல்லாத அளவுக்கு, அழிவுகரமான முறையில் தமிழ் வாக்குகளைப் பிரித்துவிடும்.

புலம்பெயர் தமிழ் மக்களாகிய நாம், அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி தற்போதைய துர்ப்பாக்கிய உத்தியை மறுபரிசீலனை செய்யுமாறும் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக (TNA) ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் விரும்புவது இந்த ஒற்றுமையைத்தான். நிரந்தர அரசியல் தீர்வு பற்றி இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பேசிக் கொண்டிருக்கும் காலத்தின் தேவையும் இதுவாகும்.

நமது மக்களின் நல்வாழ்வு, கண்ணியம், சுதந்திரம் ஆகியவை நமது தலைமைகளின் முதன்மையான குறிக்கோளாக இருக்கும்போது, ஒற்றுமை அடையப்படும் என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.