தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது யார்?

440 0

 

ஈழத் தீவில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பயணத்தின் ஒரு செயற்பாடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டது. .

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தி, இந்த கூட்டமைப்பை ஆரம்பித்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாமையினால், வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் 2001ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது தேர்தலில், நாடாளுமன்றத்தில் 15 ஆசனங்களை தம்வசப்படுத்திக் கொண்டது. 2004ஆம் ஆண்டு காலப் பகுதியில் கூட்டமைப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்த, தமிழர் விடுதலை கூட்டணி உள்ளிட்ட சிலர், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தனர். அதன்பின்னர், தனது கட்சி சின்னமாக உதய சூரியன் சின்னத்தை பயன்படுத்த, வீ.ஆனந்தசங்கரி நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவை பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து, இலங்கை தமிழரசு கட்சியின் சின்னமாக வீட்டுச் சின்னத்தை பயன்படுத்துவதற்கான தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  2004ம் ஆண்டு எடுத்திருந்தது.

2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 22 ஆசனத்தை தன்வசப்படுத்திக் கொண்டு, மாபெரும் கூட்டமைப்பாக உருவெடுத்தது.

அதன்பின்னரான காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, மேலும் பலர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தனர்.

இதன்படி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன்  ஆகியோர்  கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாகினர்.

பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரிந்து சென்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இறுதியாக மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து செயற்பட்டு வந்தன. இதன்படி, மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி, செல்வம் அடைகலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) மற்றும் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகிய கட்சிகளே கூட்டமைப்பில் இறுதியாக செயற்பட்டன.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதை அடுத்து, ஆயதப் போராட்ட வழியில் வந்த ஐந்து கட்சிகள், கூட்டமைப்பை தமது வசப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), செல்வம் அடைகலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), கதிர் தலைமையிலான ஜனநாயக போராளிகள் கட்சி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டமைப்பை தமதாக்கிக் கொண்டுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சியின் சின்னமாக வீட்டுச் சின்னத்தில் இதுவரை காலமும் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனிவரும் காலத்தில்   குத்துவிளக்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் சுமந்திரன் என செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

அனைவரும் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்று நாங்கள் சொன்னபோது சம்பந்தன் சொல்கிறார் நல்ல விடயம் வாருங்கள் என்கிறார்.

ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுமந்திரன் சொல்கிறார் “இல்லை எங்களுக்கு இரண்டு மூன்று பேரில் உடன் பாடு இல்லை அதனால் சேர்வது கஷ்டம்” என்றார். எனவே.தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் சுமந்திரன்தான் என்கிறார் செல்வம்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தமைக்கு ரணிலே காரணம் என்கிறார் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கஜதீபன்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தமைக்கு, ரணிலின் பின்னணியில் இயங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு குழுதான் முழுக் காரணம்.

அரசியலில் மிகப்பெரிய ராஜதந்திரம் பிரித்தாளும் கொள்கை. இது ரணிலுக்கு கைவந்த கலை. பிரித்தானியர்களின் பிரித்தாளும் கொள்கையை ரணில் தனது அரசியல் வாழ்கையில் மிகவும் தந்திரமாக கையாளுகின்றார்.“ புத்தி உள்ளவனுக்கு கத்தி தேவையில்லை” என்ற மேற்கோள் நினைவில் வந்து செல்கின்றது.

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு“ என ஈழத்தமிழினத்திற்கு புரியாமல் இருப்பது ஏன்?

“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என தமிழ் அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொண்டால் மட்டுமே விடிவு. மனதளவிலும் கொள்கையளவிலும் ஒன்றுபட்டு தமிழ் கட்சிகள் ஒரு  மிகப்பலமான சக்தியாக விளங்க ஈழ மாத ஆசீர்வதிப்பாராக.