புதிய ஆணைக்குழுவை அமைத்தாலும் தேர்தலை பிற்போட முடியாது

193 0

அரசியலமைப்பு பேரவையால் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும் , தேர்தலை பிற்போட முடியாது.

அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் அரசியலமைப்பில் எமக்கு உரித்தாக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் ஸ்திரமாகவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் செவ்வாய்கிழமை (31) ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

21ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாம் உள்ளிட்ட அனைத்து ஆணைக்குழுக்களினதும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படும். எவ்வாறிருப்பின் அரசியலமைப்பு பேரவையினால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை , எம்மால் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

ஆணைக்குழு உறுப்பினர் நியமனம் தொடர்பில் அரசியலமைப்பு பேரவையில் பேசப்பட்டிருந்தாலும் , அதற்கு மேலும் 2 மாதங்கள் செல்லும் என்பதால் அது குறித்து கலவரமடையத் தேவையில்லை.

மாறாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்களால் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர வேறு எந்த வகையிலும் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்த முடியாது.

எதிர்வரும் 10 ஆம் திகதி தேர்தலுடன் தொடர்புடைய 3 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. அவற்றில் ஒன்று தேர்தலைக் காலம் தாழ்த்துமாறும் , ஏனைய இரண்டும் தேர்தலை நடத்துமாறும் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் ஆகும். நீதிமன்ற தீர்ப்பிற்கமையவே அனைவரும் செயற்பட வேண்டும்.

ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் , தம்மால் நிறைவேற்றப்பட வேண்டிய அரசியலமைப்பு ரீதியிலான பொறுப்பை கைவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நாம் ஸ்திரமாகவுள்ளோம்.

எல்பிட்டி உள்ளுராட்சி மன்றத்திற்காக காலம் நிறைவடையவில்லை என்பதால் அந்த தொகுதியில் தேர்தல் இடம்பெறாது.

அதே போன்று கல்முனை மற்றும் சாய்ந்தமருது தொகுதிகளில் காணப்படும் பிரச்சினைகளால் நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இவை தவிர 339 உள்ளுராட்சிமன்றங்களில் தேர்தல் இடம்பெறவுள்ளது என்றார்.