வடக்கில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமம் ஆராய்வு

71 0

வடமாகாணத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையிலான உயர்மட்ட குழு யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளது.

யாழ். நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சந்திப்பில் வடமாகாணத்தில் எவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ளலாம்? அதற்கான  சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது.

ஆளுநரின் செயலாளர் வாகீசன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

வடக்கின் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பதற்கு வி.ஜி.பி குழுமம் முன்வந்துள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வடமாகண ஆளுநரும் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க .சச்சிதானந்தன் கருத்தை தெரிவிக்கையில்,

வி.ஜி.பி குழுமமானது இந்தியாவில் பிரபலமான சுற்றுலாத்துறை நிறுவனமாக கருதப்படுகின்ற நிலையில் அதனை நாம் சரிவர பயன்படுத்தி வடக்கு சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் முன் நின்று செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் யாழ். இந்திய துணை தூதரகத்தின் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.வாகீசன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகியோரும், இந்திய தரப்பில் வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையில் நீதியரசர் டி.என் வள்ளிநாயகம், பேராசிரியர் உலகநாயகி பழனி, பேராசிரியர் திலகவதி, பேராசிரியர் புவனேஸ்வரி, வழக்கறிஞர் அப்துல் கனி, திருமதி கலைவாணி, திருமதி சரண்யா, திரு பீட்டர், முனைவர் பட்ட ஆய்வாளர் நாகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.