பாராளுமன்றத்தின் காலத்தையும் அரச நிதியையும் ஜனாதிபதி வீண்விரயமாக்குகிறார்

73 0

அரசாங்க நிதி தொடர்பான குழு,கோப் மற்றும் கோபா குழு ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரச செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிடும் ஜனாதிபதி பாராளுமன்றத்தின் காலத்தையும், அரச நிதியையும் வீண்விரயமாக்குகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

உரிய காரணிகள் ஏதும் இல்லாமல் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை நிராகரிக்கத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடர் 2022.07.28 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டு,மூன்றாவது கூட்டத்தொடர் 2022.08.03 ஆம் திகதி ஆரம்பமானது.

மூன்றாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து மாத காலத்திற்குள் பாராளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஊழல் மோசடி,அரச நிதி வீண்விரயம் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழு,கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்கள் வினைத்திறனான விசாரணைகளை மேற்கொண்டன.

பாராளுமன்ற குழுக்களின் செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாரளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்தால் சாதகமாக ஏதும் நேர்ந்து விடாது,பாதகமான விளைவுகளே தோற்றம் பெறும்.40 இற்கும் அதிகமான பாராளுமன்ற குழுக்களை மீண்டும் கூட்ட வேண்டும்,புதிய நியமனங்கள் வழங்க வேண்டும்.

அரச செலவுகளை மட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் காலத்தையும்,அரச நிதியையும் வீண்விரயம் செய்கிறார்.

கோப் குழு,கோபா குழு மற்றும் அரச நிதி தொடர்பான குழுக்களுக்கு தலைவர்களை நியமிக்கும் போது அரசியல் கட்சிகளுக்கு இடையில் மீண்டும் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.அரசியல் தரப்பினருக்கு இடையில் இல்லாத பிரச்சினைகளையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிக்க முனைகிறார் என்றார்.