தோட்ட நிர்வாகங்களின் அழுத்தம் காரணமாக நிரந்தர தொழிலாளர் வெளியேற்றம்

202 0

பெருந் தோட்ட கம்பனி நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் தொழில் ரீதியான அழுத்தம் காரணமாக தோட்டங்களில் வேலை செய்யும் நிரந்தர தொழிலாளர்கள், தோட்டங்களில் இருந்து வெளியேறி வேறு தொழில்களை நாடி வருவது பதுளை மாவட்ட தோட்டங்களில் அதிகரித்துள்ளது.

இது பெருந்தோட்டங்களின் இருப்புக்கு ஆரோக்கியமானதல்ல என  ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம் தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கிய நாளில் இருந்து தோட்ட நிர்வாகங்கள் தொழில் வழங்கும் விடயத்தில் கடும்போக்கை கடைப்பிடித்து அவர்களுக்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

ஒரு நாள் பேருக்கு 20 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டிய கட்டாயத்தில் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவ்வாறு இல்லாமல் அவர்கள் 15 கிலோகிராம் பறித்து விட்டால் முதல் 10கிலோகிராமிற்கு 500 ரூபாயும் மிகுதியாக உள்ள 5கிலோகிராமிற்கு , ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபாய் வீதம் 200 மாக,நாளொன்றுக்கு 700 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 7கிலோகிராம் இறப்பர் பால் சேகரிக்காவிட்டால் அவர்களுக்கு 1,000 ரூபாய் நாட் சம்பளம் மறுக்கப்படுகின்றது.

தோட்ட நிர்வாகங்கள் நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கும் வேலை நாட்களை குறைப்பதற்காக, ஓய்வூதியம் பெற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி ரூபாய் 700 என்ற குறைந்த சம்பளத்தில் பெரும்பாலான வேலைகளைப் பூர்த்தி செய்து கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர்.

தொழிலாளர்களுக்குத் தோட்டங்களில் உள்ள  தேயிலை மலைகள் (4 நிரைகள்) தொகுதிகளாக (Block) பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு பிரித்து வழங்கப்பட்ட தேயிலை மலைகளைப் பெற்று கொண்டதொழிலாளர்கள் “உற்பத்தியாளர்கள்” என்ற பதத்தில்  அழைக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மலையின் கவ்வாத்து,மட்டம் வெட்டுதல், களையெடுத்தல் மற்றும் கொழுந்து பறித்தல் போன்ற அனைத்தையும் தொழிலாளர்களே மேற்கொள்ள வேண்டும்.

தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு வழங்கும் கிருமிநாசினி,உரம் என்பவற்றிற்கு கட்டணத்தையும்,  காணி வரியையும் அறவிட்டுக் கொண்டு வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் பறிக்கப்படும் கொழுந்திற்கு கிலோகிராம் 1இற்கு, 40 ரூபாய் வழங்கி எவ்வித செலவுமின்றி பாரிய இலாபத்தை ஈட்டி வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கியப்படி 35 ஆயிரம் ஹெக்டயர் பெருந்தோட்ட தரிசு தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து வெளியார் உற்பத்தி முறையின் (Out Grower System)   மூலமாக அவர்களை நிலவுடமையாளர்களாக்க வேண்டும்.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு தொழிலாளர்களை திணறடித்து வரும் நிலையில் 1,000 ரூபாய் சம்பளமின்றி அவர்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்புகளை நீக்க மாற்றுத் தீர்வுகளைத் திட்டமிட்டு செயற்படுத்தா விட்டால் பெருந்தோட்டத் துறையின் இருப்பு கேள்விக்குள்ளாகும் என்றார்.