தென்னகோனுக்கு எதிரான நடவடிக்கை சட்டமாதிபர் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்படும்

66 0

மே 09 காலி முகத்திடல் போராட்டகளம் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பில் மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணை, அமைச்சு மட்டத்தில் முன்னெத்த ஒழுக்காற்று விசாரணை அறிக்கை சட்டமாதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை சட்டமாதிபர் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

தொழிலதிபர் தினேஸ் ஷாப்டரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் இருவார காலத்திற்குள் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக ஆறு மாத காலத்திற்குள் ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்து, அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்கமாறு உயர்நீதிமன்றம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது,ஆறு மாத காலத்திற்குள் அறிக்கை உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய செயற்படுவோம்.

மே 09 காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் மேல்மாகாண பிரதி பொலிஸ்மா தேசபந்து தொன்னகோன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணை அறிக்கை மற்றும் பொது மக்கள் அமைச்சு மட்டத்தில் அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையின் அறிக்கை சட்டமாதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.சட்டமாதிபர் திணைக்களத்தின் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜுலை 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டகார்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்த கோடி கணக்கிலான பணத்தை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்த விடயம்,அதனுடன் தேசபந்து தென்னகோன் தொடர்புப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்விடயம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அவ்விடயம் தொடர்பான விடயங்களை குறிப்பிட முடியாது.

தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் இருவார காலத்திற்குள் பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.