அனைத்துக் கடன்வழங்குனர்களுடனான இணக்கப்பாட்டை வெகுவிரைவில் எட்டமுடியும் என்றும், அதன்மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவில் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தலைமையிலான வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளான இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், சர்வதேச கடன் மற்றும் நிதி மேம்பாட்டுக்கொள்கைப் பிரிவின் தலைவர் கரிஸ் அப்ல்கன்-ரேலர், பொதுநலவாய வெளிவிவகார மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் தெற்காசிய மற்றும் ஆப்கானிஸ்தான் பொருளியலாளர் மத்தியூ வேர்டிங்காம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் மேம்பாட்டுப்பிரிவின் தலைவர் ஆன்ட்ரூ ப்ரைஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான அடித்தளமாக அமையுமென இலங்கை மக்கள் நம்பிக்கைகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி ஜனாதிபதி உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை முன்னிறுத்தி செயலாற்றிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இப்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களின் விளைவாகப் பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதாக இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர், இம்மறுசீரமைப்புக்கள் குறுங்கால அடிப்படையில் கடினமானவையாக இருந்தாலும் நீண்டகால ரீதியில் நன்மையளிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின் ஊடாக அடைந்துகொள்ளக்கூடிய நேர்மறையான மாற்றங்கள் தொடர்பில் நாட்டுமக்கள் நம்பிக்கைகொண்டிருக்கின்றார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

