இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைப்புவிடுக்கப்பட்ட நிலையிலேயே பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் இலங்கை வருகின்றார்.
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி நாட்டை வந்தடையவுள்ள பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் பெப்ரவரி 5 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவுள்ள அவர், அரசியல்கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட மேலும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் ‘நாட்டின் பெருமைக்குரிய தினங்களில் ஒன்றான 75 ஆவது சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்புவிடுக்கப்பட்டமை குறித்து நான் பெருமிதமடைகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.
‘குறிப்பாக காலநிலை மாற்றம், கடற்பாதுகாப்பு போன்ற விடயங்களில் மிகவும் முற்போக்கான கருத்துக்களை வெளிப்படுத்திவரும் இலங்கை பொதுநலவாய அமைப்பின் மிகமுக்கிய உறுப்பினராக திகழ்கின்றது.
அந்தவகையில் இலங்கைக்கும் பொதுநலவாய அமைப்பிற்கும் இடையிலான எதிர்காலத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் நான் எனது விஜயத்தின்போது ஆராயவுள்ளேன்’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

