அமைச்சரவை மறுசீரமைப்பில் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டமை நியாயமானதே

179 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் நான். ஆகவே, அமைச்சரவை மறுசீரமைப்பில் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை நியாயமானதே.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியாக செயற்பட தயாராகவுள்ளோம். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப அரசியல் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (25)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. நாட்டுக்கு சேவையாற்றியுள்ளோம். ஆகவே, மக்கள் மத்தியில் எம்மால் தாராளமாக செல்லலாம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தை முன்னிலைப்படுத்தி 252 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாறுபட்ட சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவுள்ளோம்.

பொருளாதார மீட்சிக்காக வரி அதிகரிப்பை தவிர்த்து மாற்று வழிமுறை ஏதும் தற்போது கிடையாது. வரி கொள்கையை மறுசீரமைக்குமாறு எதிர்வரும் வாரம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள ஆளும் தரப்பினர் கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம்.

பொருளாதார விவகாரங்களில் அரசியல் தலையீடு ஏதும் கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சரவை அமைச்சுக்களை விஸ்தரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக எதிர்தரப்பினர் குறிப்பிடுகின்றனர். அரசியலமைப்பின் பிரகாரம், அமைச்சரவை முழுமைபடுத்தப்படவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் நான். அமைச்சரவை மறுசீரமைப்பில் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை நியாயமானதே.

அரசியலில் பல ஆண்டுகாலம் எதிர்க்கட்சியிலும் அரசாங்கத்திலும் பதவி வகித்துள்ளோம். ஆகவே, வெற்றி / தோல்வியை மக்கள் தீர்மானிப்பார்கள். ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சியிலும் இருக்க தயார். பதவி இல்லை என்பதற்காக கட்சிக் கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்றார்.