பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சொத்துக்களை விற்குமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை!

234 0

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு சில சொத்துக்களை விற்பனை செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரின் லெகாட் அடுத்த மாதம் 5ஆம் நாள் சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் சர்ச்சைக்குரிய விடயமான சொத்துக்களை விற்பனை செய்வது குறித்து கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் விற்பனை செய்யக்கூடிய சொத்துக்களை சர்வதேச நாணய நிதியம் பட்டியலிட்டுள்ளதுடன், அவை கேந்திரமுக்கியத்துவமற்றவை எனவும் கூறியுள்ளது.

இருப்பினும், இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை, மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவைக் குழுவின் சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முக்கிய சில சொத்துக்களை விற்பதன்மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டமுடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.