தேர்தலை பிற்போடும் சதிகளை தேர்தல் ஆணைக்குழு முறியடித்துள்ளது – பெப்ரல் அமைப்பு

70 0

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையை  அடிப்படையாகக் கொண்டு தேர்தலை பிற்போடுவற்கு பல்வேறு தரப்பினரும் முயற்சித்த போதிலும், அதனை கடந்து தேர்தலை பிற்போடும் சதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணைக்குழு முற்றாக முறியடித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

1 கோடியே 68 இலட்சத்து 11 ஆயிரத்து 368 வாக்காளர்கள் 13,700 வாக்களிப்பு  நிலையங்களில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள், மேயர்கள், தவிசாளர்கள் தமது வாகனங்களை உடனடி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், திறப்பு விழாக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளூராட்சி மன்ற வளங்களை பயன்படுத்தி தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோன்று மத்திய அரசாங்கத்திலும் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலானது பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடுமையான சூழலில் இடம்பெறுகிறது. இந்த தேர்தலை பிரச்சினைகளின்றி அமைதியான முறையில் நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடமும் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், அமைச்சரவையூடாகவும் எல்லை நிர்ணய சபையை நியமித்து தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சித்தனர். அதேபோன்று பாராளுமன்றத்தின் ஊடாக சட்டம் ஒன்றை நிறுவி, தேர்தலை பிற்போடுவதற்கான பலத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

எனினும், இவை இடையூறாக அமையாது என்று நாம் நம்புகிறோம். அது மாத்திரமின்றி, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை அச்சுறுத்தி தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

மீண்டும் பணப் பிரச்சினையை கொண்டுவந்து தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றனர். இருப்பினும், அனைத்து சதிகளையும் நாடு முறியடித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு முறியடித்துள்ளது என்றார்.