உலகிற்கு இந்தியப் பிரதமர் மோடியின் தலைமை முக்கியம்: உலகப் பொருளாதார மன்ற நிறுவனர்

73 0

 பலவாறாக பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை முக்கியமானது என்று உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான க்லாஸ் ஸ்வாப் (Klaus Schwab) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அமைச்சரவைக் குழுவையும், மிக முக்கிய இந்திய தொழிலதிபர்கள் குழுவையும் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உலக சுகாதாரம், பெண்கள் தலைமையிலான பொருளாதார முன்னேற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான பொது கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. புவிசார் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றில் இந்தியா ஒளிபொருந்திய நாடாக திகழ்கிறது.

உலக பொருளாதார மன்றம் இந்தியாவுடன் 38 ஆண்டுகாலமாக நல்லுறவைக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கும் இந்த தருணத்தில் அதனுடனான உலக பொருளாதார மன்றத்தின் நல்லுறவு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஜி20-யின் இந்திய தலைமையின் கீழ் உலகம் வளர்ச்சி காணும். பலவாறாக பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில் ஜி20 கூட்டமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்றிருப்பது மிகவும் முக்கியமானது” என க்லாஸ் ஸ்வாப் தெரிவித்துள்ளார்.