தேர்தல் செலவுகளை ஏற்கும் இயலுமை திறைசேரிக்கு இல்லை

64 0

தேர்தல் செலவுகளை ஏற்கும் இயலுமை திறைசேரிக்கு இல்லை. தற்போதுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் செலவுகளையும் திறைசேரி ஏற்கும் பட்சத்தில் அது அரச நிதி நிலைமையில் பாரதூரமான பாதகமான தாக்கத்தை செலுத்தும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு  வெள்ளிக்கிழமை (20) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

திறைசேரிய செயலாளரினால் அண்மையில் உச்ச நீதிமன்றத்திற்கு நாட்டின் உண்மையான நிதி நிலைலைவரம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் 162 பில்லியன் ரூபாவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அனைத்து செலவுகளின் பின்னர் 18 பில்லியன் மாத்திரமே எஞ்சும் தொகையாகக் காணப்படும்.

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சிறு அபிவிருத்தி திட்டங்களுக்காக 100 பில்லியன் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்வாண்டு நிதி முகாமைத்துவம் கட்டுப்பாட்டை இழக்கும் நிலைமையே அதிகமாகக் காணப்படுகிறது.

இவ்வாறான நிலைமையில் தேர்தல் செலவுகளையும் ஏற்க வேண்டியேற்பட்டால் அது அரச நிதி நிலைமையில் பாரதூரமான பாதகமான தாக்கத்தை செலுத்தும். எனவே தேர்தல் செலவுகளை ஏற்பது திறைசேரிக்கு பெரும் சவாலாகும்.

கடந்த ஆண்டு அரச வருமானம் 1958 பில்லியன் ரூபாவாகும். எனினும் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளி 3058 பில்லியனாகும். அதாவது நூற்றுக்கு 256 வீதம் வருமானத்தை விட செலவு அதிகமாகவுள்ளது.

இம்மாதம் 18 ஆம் திகதி வரை கிடைக்கப் பெற்றுள்ள வருமானம் 72 பில்லியனாகும். எனினும் வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையிலான இடைவெளி 310 பில்லியனாகும். அதாவது நூற்றுக்கு 530 சதவீதம் அதிகமாகும். இது இம்மாத இறுதியில் 480 பில்லியனாக அதிகரிக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தான் இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் தேர்தல் செலவுகளையும் ஏற்பது பெரும் நெருக்கடியாகும் என்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தேர்தலை நடத்துமாறோ அல்லது நடத்த வேண்டாம் என்றோ தெரிவிப்பதற்கான அதிகாரம் நிதி அமைச்சிற்கு இல்லை. நாட்டின் உண்மையான நிதி நிலைமையை நாம் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். எனவே தேர்தல் குறித்து அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களே தீர்மானங்களை எடுக்கும் என்றார்.