சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2023!

399 0

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது ஆண்டுதோறும் சுவிஸ் வாழ் உறவுகளுடன் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வானது 15.01.2023 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் தமிழர் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவிலும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் சுவிஸ் தமிழர் இல்லம் இணைந்து நடாத்திய இவ் பொங்கல் விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் தமிழர் பாரம்பரிய பண்பாட்டு முறைமையில் பொங்கல் பொங்கி, பொதுச்சுடர், ஈகைச்சுடர், நிகழ்வுச்சுடரேற்றலுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

விழாவில் எழுச்சி நடனங்கள், மேற்கத்தேய மற்றும் திரையிசை நடனங்கள், கவியரங்கம், எழுச்சி, திரையிசைப் பாடல்கள், வயலின்நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வுகள் வழங்கிய எமது அடுத்த தலைமுறையினரை எமது உறவுகள் தமது கைதட்டல்கள் மூலம் பாராட்டியமை அவர்களை மேலும் உற்சாகமடைய வைத்தன. சமகால நிகழ்வுகளை உள்ளடக்கியதான சிறப்புரையும்; வேறுபல நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் வருகை தந்திருந்த அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டு உண்டு மகிழ்ந்து தமது வாழ்த்துகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் மகிழ்வுணர்வுடன் இனிதே நிறைவுபெற்றன.

தமிழர் திருநாள் 2023 நிகழ்வை நடாத்த பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள், இன உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் எமது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.