தேர்தலை பிற்போட்டால் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் – எஸ்.எம்.மரிக்கார்

140 0

ஐக்கிய தேசிய கட்சியையும், பொதுஜன பெரமுனவையும் பாதுகாக்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட  ஜனாதிபதி    முயற்சிக்கிறார். தேர்தலை பிற்போட்டால் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

நாட்டின் நிதி நெருக்கடி உள்ளது என்பதை காண்பிப்பதற்காக மக்களுக்கான நலன்புரி சேவைகள், சம்பளம் வழங்கல், எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி திட்டமிட்ட வகையில் தாமதப்படுத்தப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் திருத்தங்களை முன்வைத்ததால் இந்த சட்டமூலம் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு அடிமையானவர்களுக்கு மாத்திரம் புனர்வாழ்வளித்தல் என வரையறுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அவதானம் செலுத்தாமல் இருந்திருந்தால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் இந்த சட்டமூலத்தின் ஊடாக முடக்கப்பட்டிருக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து அரசியல் செய்துள்ளோம். ஆகவே அவர் எவ்வாறு செயற்படுவார் என்பது எமக்கு நன்கு தெரியும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியலமைப்பின் பிரகாரம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறையில் சூழ்ச்சி செய்கிறது.

தேர்தலை நடத்த நிதி இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு காண்பிக்கும் வகையில் மக்களுக்கான நலன்புரி சேவைகள்,சம்பளம் செலுத்தல்,எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவு திட்டமிட்ட வகையில் தாமதப்படுத்தப்படுகிறது.

கடன் மறுசீரமைப்பு விவகாரம் எதிர்வரும் மார்ச் மாதமளவில் வெற்றிப்பெறும் என குறிப்பிட முடியாது. ஏனெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது.மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காது.

பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.ஆகவே மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவது அத்தியாவசியமானது.தற்போது கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவுகளை குறைத்தல் சட்டமூலத்தை நிறைவேற்றினால் அதனை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முடியும்.இதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அரசியலமைப்பை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி தற்போது அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுகிறார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியிலும், பொதுஜன பெரமுனவிலும் எவரும் முன்னிலையாகவில்லை.ஐக்கிய தேசிய கட்சியையும் தம்மை தெரிவு செய்த பொதுஜன பெரமுனவையும் பாதுகாக்க ஜனாதிபதி இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட சூழ்ச்சி செய்கிறார்.தேர்தலை பிற்போட்டால் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை ஜனாதிபதிக்கு தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறோம்.