ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் 27ஆம் திகதி ஆரம்பம்

259 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இம்முறை இலங்கை தொடர்பான பிரேரணையானது பிரித்தானியாவின் பிராதான அனுசரணையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் எதிர்வரும் 28ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார்.

இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அவர் விளக்கமளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலின் பிரகாரம், மார்ச் மாதம் 2 ஆம், 15 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பான விவாதங்கள் ஜெனிவாவில் இடம்பெறவுள்ளன.

சித்திரவதைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சர் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளரான ரீட்டா ஐசாக் ஆகியோரின் அறிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பல்வேறு அரச சார்பற்ற அமைப்புகள் இலங்கை தொடர்பில் பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை முன்வைக்கப்படவுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தற்போதைய அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கும் வகையில் இம்முறையும் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் மாதம் 23ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.