அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தோடு குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி விழிப்புணர்வு நாடகமொன்றினை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட வளாகத்துக்கு முன்பாக இன்று (13) நடத்தியுள்ளனர்.
இதன்போது குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் கூறுகையில்,

இம்முறை தைப்பொங்கலுக்கு எமது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பியபோதும் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
இதனை உணர்த்தும் வகையில் சிறைக்கூண்டு அமைக்கப்பட்டு, சிறையில் உள்ள கைதிகளை போல உருவகித்து இந்த நாடகத்தினை நடத்தியிருக்கிறோம்.
பொங்கல் பொருட்கள் வீடுகளில் தயார் நிலையில் உள்ளபோதும், எமது உறவுகளின்றி இம்முறையும் பொங்கலை பொங்க முடியாத சூழலை நாம் நாடகமாக நிகழ்த்திக் காட்டியிருந்தோம்.
மேலும், அரசியல் கைதிகள் விடுதலையின்றி வாழும் சூழலில், இங்கு நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தரும்போது, எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் குறித்த நிகழ்வை முற்றாக நிராகரிக்க வேண்டும்.
இதேவேளை எஞ்சியிருக்கும் சிறைக்கைதிகளான எங்களது உறவுகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


