மன்னார் – திருக்கேதீஸ்வர பகுதியில் 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கானது அனுராதபுர நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களை காபன் பரிசோதனைக்காக அமெரிக்கா, புளோரிடா நிறுவனத்துக்கு கொண்டுசெல்ல சில மாதிரிகள் கடந்த திங்கட்கிழமை (ஜன. 9) தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பாதுகாப்பு கருதி தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த எச்ச மாதிரிகளுக்கான சீ14 காபன் பரிசோதனைக்காக குறித்த நிறுவனத்துக்கு அனுப்பவென மாதிரிகளை தெரிவுசெய்வதற்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மனித எச்சங்களிலிருந்து மாதிரிகளை தெரிவுசெய்வதற்கான நடைமுறைகள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
அந்த மாதிரிகள் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய, இவ்வழக்கு அனுராதபுரம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மனித எச்சங்களின் மாதிரிகள், பரிசோதனைக்காக அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதிபதி நாணயக்க ஜெயசூரிய முன்னிலையில் தெரிவுசெய்யப்பட்டது.
முன்னதாக திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இந்த மனித எச்சங்களை அகழ்ந்தெடுக்கும் பணியானது வைத்திய நிபுணர் எல்.பி. வைத்தியரத்தின, வைத்திய கலாநிதி ஹேவகே, பொலிஸ் அதிகாரி லக்ஷரி, வைத்திய குழாம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தொல்பொருள் திணைக்களத்தை சேர்ந்த விஜயரட்ன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான வழக்கில் முன்னிலையாகிவரும் சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ்.நிரஞ்சன் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது வைத்திய நிபுணர் வைத்தியரத்தின கூறுகையில்,
அங்கு வைக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளிலிருந்து 6 பெட்டிகளில் உள்ள எச்சங்களை மாதிரியாக தெரிவுசெய்வதற்கு நீதிபதியிடம் தெரிவித்த நிலையில், 46, 42, 16, 66, 28 மற்றும் 56 இலக்கங்கள் கொண்ட பெட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன.
இதில் இலக்கம் 16ஐ கொண்ட பெட்டியை திறந்தபோது அதற்குள்ளும் சந்தேகத்துக்குரிய மாறுபட்ட இலக்கங்கள் கொண்ட பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அந்த பெட்டியிலிருந்த எச்சங்கள் மாதிரிக்காக எடுக்கப்படவில்லை என்றதோடு, அது தொடர்பான விடயங்களை சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த ஆறு பெட்டிகளுக்குப் பதிலாக ஐந்து பெட்டிகளிலிருந்து தலா ஒரு மனித எச்சம் கொண்ட பல்லும், பல்லின் 15 சென்றி மீற்றர் கொண்ட ஒரு எலும்புத் துண்டும் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து பெட்டிகளில் பொதி செய்யப்பட்டன.
அனுராதபுர நீதவான் என்.ஜெயசூரிய முன்னிலையில் பிரித்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வுக்காக மன்னார் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதாகவும் வீ.எஸ்.நிரஞ்சன் கூறினார்.
அத்துடன் இந்த மாதிரிகளை தெரிவு செய்வதற்கான திகதி, நேரங்கள் தனக்கோ, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக சட்டத்தரணிக்கோ தெரியப்படுத்தாத நிலையிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மன்னார், திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு நிலத்தடியின் ஊடாக குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் ஆலய வீதிக்கு அருகாமையில் 2013ஆம் ஆண்டு நீர் வழங்கல் சபையினால் குழாய்கள் பதிக்கப்பட்டபோதே இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

