ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியால் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போவதில்லை. கடந்த காலம் குறித்து சிந்தித்து மக்கள் ஒருமித்து எடுக்கவுள்ள தீர்மானமே நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு வித்திடும் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன 11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்
எந்தவொரு தேர்தலாலும் நாட்டில் தற்போதுள்ள நிலைமையை மாற்றியமைக்க முடியாது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நிறுத்துவதற்காகவே தேர்தலை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தலை நடத்தினாலும் ஆர்ப்பாட்டங்களை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது.
ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் மக்களின் போராட்ட உரிமையை முடக்கிய அரசாங்கம் , தற்போது வாக்களிக்கும் உரிமைகளை எந்த வகையிலாவது முடக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.
அன்று ஜே.ஆர்.ஜயவர்தன செய்ததையே இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்து கொண்டிருக்கின்றார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் முன்னிலை சோசலிச கட்சி தனித்தே போட்டியிடும். எந்ததெந்த மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம்.
ஐக்கிய தேசிய கட்சி , பொதுஜன பெரமுன கூட்டணி புதியதொரு விடயமல்ல. திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தவர்கள் தற்போது உத்தியோகபூர்வமாக திருமணம் செய்யவுள்ளனர். இதுவே இவர்களின் கூட்டணியில் புதிய விடயமாகும்.
எனவே மக்கள் இது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும். இவர்களது கூட்டணியால் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போவதில்லை. மக்களின் ஒருமித்த தீர்மானமே நாட்டின் சிறந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றார்.