தெரிவத்தாட்சி அதிகாரிகளின் செயற்பாடுகளை நிறுத்த வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மீளப்பெறப்பட்டது

198 0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் பணிகளில் இருந்து விலகுமாறு  சகல மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல்கள் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் கட்டுப்பணம், வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகளில் ஈடுபடுவது தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களின் பொறுப்பாகும்.

ஆகவே தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கடமைகளில் ஈடுப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க சகல மாவட்டங்களுக்குமான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவித்துள்ளார்.

2023.01.09 ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தில் மறுஅறிவித்தல் விடுக்கும் வரை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பொறுப்பேற்கும் கடமைகளில் இருந்து விலகுமாறு சகல மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அதற்கமைய செயற்படுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன  சகல மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஊடாக 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார்.

பொது நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையை தொடர்ந்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 4(1) ஆவது உறுப்புரையின் பிரகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய 2022.12.21 ஆம் திகதியன்று 2311 கீழ் 26 இலக்கத்தில் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானிக்கு அமைய ஒவ்வொரு நிர்வாக மாவட்டங்களுக்கும் தேர்தல் தெரிவத்தாட்சி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் கட்டுப்பணம் செலுத்தல் நடவடிக்கைளில் ஈடுப்படுவது தெரிவத்தாட்சி அலுவல்களின் பொறுப்பாகும்.2023.01.01ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் கட்டளைச் சட்டத்தின் (262 பிரிவு) 26 ஆவது உறுப்புரையின் பிரகாரம் நடவடிக்கைகள் 2023.01.04 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த உறுப்புரையின் 5ஆம் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் 2023.01.18 ஆம் திகதி முதல் 2023.01.21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரையான காலப்பகுதியில் வேட்புமனுக்களை பொறுப்பெற்பது உங்களின் (தேர்தல் தெரிவத்தாட்சி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள்) பொறுப்பாகும்.

இந்த அறிவுறுத்தலின் பிரதிகள் தேசிய தேர்தகள் ஆணைக்குழுவின் செயலாளர்,சகல மாவட்ட பிரதிநிதிகள்,உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதான அலுவலக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.