உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்த நிலையிலேயே, கட்டுப்பணத்தை பொறுப்பேற்பதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு அறிவித்து வெளியிட்ட சுற்று நிரூபத்தை இரத்து செய்தாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் எவ்வித பிளவுகளும் இன்றி ஒரே நிலைப்பாட்டிலிருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே மேற்குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவில் பிளவுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தல்ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடியிருந்தார்.
ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் சட்டமா அதிபருடன் நேரடியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கியிருந்தார்.
அந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சரவை கூடும் வரை தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து வாய்மொழி மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அறிவித்தல் எதுவும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என குறித்த சிரேஷ்ட அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலைமையிலேயே உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பொறுப்பேற்பதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அமைய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டமையினால், குறித்த சுற்று நிரூபத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
எந்தவொரு நிலைமையிலும் எவ்வித பிளவுகளும் இன்றி ஒரே நிலைப்பாட்டிலிருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறித்த அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

