ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒருவார காலக்கெடுவை வழங்கியது தமிழ்த்தரப்பு

138 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒருவாரகால கலக்கெடுவை தமிழ்த் தரப்பு வழங்கியுள்ளதோடு, அக்காலப்பகுதிக்குள் அரசால் நடைமுறைச்சாத்தியமாக்ககூடிய விடயங்கள் அடங்கிய பட்டியலை முன்வைக்குமாறும் கோரியுள்ளது.

அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு இன்றிலிருந்து தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பேசுவதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிந்தபோதும், அரசாங்கத்தின் சாதகமான சமிக்ஞையின் பின்னரே அடுத்தகட்டப் பேச்சு தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் தமிழ்த் தரப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் தமிழ்த் தரப்பிற்கும் இடையிலான தேசிய இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் பேசுவதற்கான தொடர்ச்சியான நான்கு நாள் பேச்சுவார்த்தையின் முதலாம் நாள் பேச்சுக்கள் இன்று  நடைபெற்றிருந்தன.

இதில் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜயதாச ராஜபக்ஷ, அலிசப்ரி, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்து கொண்டிருக்கவில்லை. அதேநேரம், தமிழ்த் தரப்பில் சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராஜா, சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். சித்தார்த்தன் சுகவீனம் காரணமாக பங்கேற்கவில்லை என்பதோடு, சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவிக்கையில்,

நேற்றையதினம் அரசாங்கத்துடன் தேசிய இனப்பிரச்சனை தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு முன்னதாக சதகமான சமிக்ஞைகளை காண்பிப்பதற்கு குறித்தவொரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியை வழங்குவதென தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு அமைவாக, எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னதாக அரசாங்கத்தினால் நடைமுறைச்சாத்தியமாக்க கூடிய விடயங்கள் சம்பந்தமான பட்டியலொன்றைக் கோரியுள்ளோம். இன்றையதினப் பேச்சுவார்த்தையின்போதும் எவ்விதமான முன்னேற்றங்களும் இடம்பெற்றிருக்கவில்லை.

வழமைபோன்றே, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் முதலில் ஐந்து பேரை விடுவிப்பது குறித்து கேட்டபோது சிலநாட்களுக்குள் விடுவிப்பதாக கூறினார்கள்.

ஆனால் அதுகுறித்து உறுதியான பதிலளிப்பதாக தெரியவில்லை. அடுத்து காணி அபகரிப்பை உடன் நிறுத்துவதும், அபகரிக்கப்பட்ட காணிகளை மீள விடுவித்தல் தொடர்பிலான முன்னெடுப்புக்கள் பற்றிய விடயத்தினை ஆராய்ந்தபோது, எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற தேசிய தைப்பொங்கலில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ள நிலையில் அங்குள்ள படை அதிகாரிகளுடன் பேச்சக்களை முன்னெடுக்க உள்ளதாக கூறினார்கள்.

அடுத்து, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து பேசப்பட்டபோது சட்டவரைவு தொடர்பில் கவனம் செலுத்துவதாக கூறினார்கள். அப்போது, சட்டவரைவாக இருந்தால் அவற்றின் நகலை முன்கூட்டியே எமக்கு காண்பிக்க வேண்டும் என்று கோரினோம்.

அதற்கு அடுத்தபடியாக அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு குறித்த விடயத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முறைமையை வெளிப்படுத்துமாறு கோரியுள்ளோம். அதற்கான கால எல்லை உள்ளிட்டவை அதில் காணப்படுகின்றன.

இவ்விடயங்கள் தொடர்பில் முன்னேற்றகரமான சமிக்ஞைகள் அல்லது செயற்பாடுகள் ஆகக்குறைந்தது திட்ட வழிபடமொன்றையாவது வெளிப்படுத்தினால் மேலதிகமாக பேசமுடியும் என்றும் அதற்காக ஒருவாரத்தினை வழங்குவதாகவும் நாம் தெரிவித்துள்ளோம்.

இதனடிப்படையில், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாக நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை முதல்நாளுடன் நிறைவுக்கு வந்துள்ளது. அரசாங்கம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் சதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தினால் தொடர்ச்சியாகப் பேசுவோம் என்றனர்.