மின் கட்டண அதிகரிப்பிற்கு இடமளிக்க வேண்டாம் – 69 இலட்சம் கையெழுத்துடன் மகஜர் கையளிப்பு

169 0

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டில் ஏழ்மை தீவிரமடையும்.

மக்கள் துயரமடைவதை கண்டு எம்மால் அமைதியாக இருக்க முடியாது, ஆகவே மின்கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இடமளிக்க வேண்டாம் என வலியுறுத்தி  சர்வ மத தலைவர்கள் 69 இலட்ச கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடம் சமர்ப்பித்தனர்.

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்பாவனையாளர் சங்கத்தினர் கடந்த ஆறாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 69 இலட்சம் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

கையெழுத்து பெறல் நடவடிக்கை நிறைவு பெற்றவுடன் நேற்றைய தினம் அந்த கையெழுத்து மகஜரை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் உட்பட சர்வமத தலைவர்கள் சமர்ப்பித்து மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.

மக்கள் பேரவையில் தலைவர் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டதாவது,

இலங்கை மின்சார சபையின் ஊழல் மோசடி மற்றும் எரிபொருள்,நிலக்கரி கொள்வனவில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை மறைப்பதற்கு நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் வெறுக்கத்தக்க செயற்பாட்டுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு,நிம்மதி இல்லாமல் வாழ்கிறார்கள்.தமது பிள்ளைகளின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டாலும் பரவாயில்லை மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் இருக்க வேண்டும்.

அரசாங்கம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தான் உள்ளது.மக்கள் படும் துயரத்தை கண்டு எம்மால் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியாது.

மக்கள் படும் துயரத்தை அரசாங்கம் உணர்வூர்வமாக நோக்குவதில்லை.மின்சாரத்துறை அமைச்சர் தன்னிச்சையான முறையில் மின்கட்டணத்தை அதிகரிக்க முயற்சிக்கிறார்.

ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு அமைய நாட்டை நிர்வகிக்க இடமளிக்க முடியாது,ஆகவே மின்கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் பாவச் செயலுக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒருபோதும் அனுமதி வழங்க கூடாது.

 

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. மின்சாரத்துறையில் இடம்பெறும் மோசடிகளுக்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் வெகுவிரைவில் தலைதூக்கும் என்றார்.