வீடுகளை நெருங்கி வரும் மலைப்புலிகள்: பெரும் அச்சத்தில் அக்கரபத்தனை நவகொலனிய மக்கள்

210 0

இரவு வேளைகளில் மலைப்புலிகளின் நடமாட்டத்தால் தலவாக்கலை, அக்கரபத்தனை நவ கொலனிய பிரதேசவாசிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இரவு நேரங்களில் வீடுகளுக்கு அருகில் வரும் மலைப்புலிகள், வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை வேட்டையாடிச் செல்வதோடு இரவு முழுவதும் வீடுகளுக்கருகில் சுற்றித் திரிவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மலைப்புலிகள் வீடுகளுக்கு வந்து கதவுகளை திறக்க முயற்சிப்பதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

அக்கரபத்தனை நவகொலனிய கிராமத்தில் உள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பெரிய மலைப்புலி ஒன்று வீட்டிற்கு வந்து வீட்டின் பின்பக்க கதவை திறக்க முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது.
மலைப்புலிகளின் நடமாட்டத்தால் இப்பகுதி மக்கள் இரவில் வெளியே வர முடியாமலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்திலும் இரவுகளை கழிக்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் அக்கரபத்தனை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதுடன், வனவிலங்கு அதிகாரிகள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.