இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் வசமாகவுள்ள என்எல்சி நிறுவனத்திற்கு 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த துடிப்பதேன் என வடலூர் அருகே நேற்று நடைபயணத்தை துவக்கிய அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள 49 கிராமங்களில் 22 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும், அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருநாள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கான நடைபயணத்தை குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட வடலூர் அருகே வாணதிராயபுரம் கிராமத்தில் துவக்கினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பாமகவினர் மற்றும் கிராம மக்களிடையே உரையாற்றும் போது, 66 ஆண்டுகளாக என்எல்சி நிறுவனம் இப்பகுதி மக்களை வஞ்சித்து வருகிறது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்தியவர்களின் மாற்று மனைகளுக்கு பட்டா வழங்கவில்லை. 49 கிராமங்களை கையகப்படுத்துவதால் இப்பகுதி மக்களுக்கும் மட்டும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. தண்ணீர், சுற்றுச்சூழல் போன்றவைகளால் இந்த மாவட்டமே பாதிக்கக் கூடும் என்பது மாவட்ட மக்கள் உணர வேண்டும்.
இப்பகுதி மக்களின் விளை நிலங்களையும், வீடுகளையும் எடுத்துக் கொண்டு, அதன்மூலம் கோடி கோடியாய் லாபமீட்டும் இந்நிறுவனம் இப்பகுதி மக்களுக்கு வேலை வழங்காமல், வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துவருவதால், இப்பகுதி மக்களுக்கு என்ன பயன்? இந்த நிலையில் தான், விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறித்து கொடுக்க பாடுபடுகின்றனர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள். விவசாயிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, விவசாயிகளை காக்கவேண்டிய வேளாண் துறை அமைச்சரே இந்த செயலை செய்யலாமா? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தந்தை முட்டம் ஆர். கிருஷ்ணமூர்த்தி, விவசாயிகளுக்கு பாதுகாவலராகவும், விவசாய வளர்ச்சிக்கும் துணையாக இருந்தவர், அவரது மகனோ விவசாயிகளுக்கு எதிரான நிலைபாட்டில் உள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
மேலும் நிலம் கையகப்படுத்தவில்லை என்றால் தமிழ்நாடு இருண்டுவிடும் என ஒரு காரணத்தையும் கூறுகின்றனர். அது முற்றிலும் தவறானது. என்எல்சியில் இருந்து சொற்ப அளவிலான மின்சாரமே தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. தற்போது மரபுசாரா எரிசக்தி மூலம் மின்சாரம் கிடைக்கும் சூழலில் நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சக்தி குறைவே.
மத்திய அரசின் புதிய கொள்கைப்படி என்எல்சி நிறுவனத்தை இரு ஆண்டுகளில், இந்தியாவின் முன்னணி நிறுவனத்திடம் விற்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிறுவனம் தனியார் வசம் செல்லவுள்ள நிலையில், அந்த நிறுவனத்திற்காக இப்போது இங்குள்ள அமைச்சர்கள் 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இங்கு கிடைத்த லாபத்தைக் கொண்டு வட மாநிலங்களில் முதலீடு செய்து, அங்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றனர். எனவே என்எல்சி நிறுவனத்தால் இப்பகுதி மக்களுக்கும், மாவட்டத்திற்கும் எந்த பயனும் இல்லை என்பதை இப்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒரு பிடி மண்ணைக் கூடு எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்பதையும், என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
இதனிடையே, அன்புமணி உடன் விருத்தாசலம் பாமக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி நடைபயணம் சென்றார்.

