கோகுல்ராஜ் கொலை வழக்கு – சாட்சிகள், ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு

166 0

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள், ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பளிக்கப்படும் என்றும், உணர்வுகளின் அடிப்படையில் அல்ல என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு: இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல இந்த வழக்கில் சங்கர் உட்பட 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா தரப்பிலும், சிபிசிஐடி போலீஸார் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ்சாட்சியம் அளித்ததால், நீதிபதிகள் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ளனர்.

தற்போது இரு நீதிபதிகளும் சென்னையில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணை நேற்றுசென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

யுவராஜ் ஒப்பதல்: கோகுல்ராஜின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், கோகுல்ராஜை, யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் அழைத்துச் செல்லும் ஆதாரங்கள் உள்ளன. கோகுல்ராஜூம், சுவாதியும் பேசிக்கொண்டிருந்தபோது தானே நேரில் சென்று விசாரணை நடத்தியதை யுவராஜ் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

கோகுல்ராஜிடம் இருந்து சுவாதியை பிரித்து அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் உள்ளன. கோகுல்ராஜின் தற்கொலை வீடியோ என சொல்லப்படும் காணொலி காட்சிகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் மொபைல்போனில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன என வாதிட்டார். யுவராஜ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் மற்றும் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் ப.பா.மோகன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘கோகுல்ராஜூடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லும் வரை மட்டுமேசிசிடிவி காட்சிகள் உள்ளன.அதன்பிறகு நடந்த நிகழ்வுகளுக்கான ஆதாரங்கள் இல்லை. இந்த வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும். உணர்வுகளின் அடிப்படையில் அல்ல” என தெளிவுபடுத்தி விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.