நீதிமன்றத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டு,பிணை வழங்கப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதை இந்திய புலனாய்வு பிரிவினர் அறிவித்ததையிட்டு எமது நாட்டு புலனாய்வு பிரிவின் திறன் நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பின் அலட்சியத்தன்மை தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவு, பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இந்த உயரிய சபை ஊடாக கடும் அதிருப்தியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே சபையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமைகளை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம் மீதான விவாதம் இன்று (நேற்று) இடம்பெறும் என எதிர்பார்த்தோம்,இருப்பினும் பல்வேறு காரணிகளினால் விவாதம் இடம்பெறவில்லை.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக ரீதியில் ஈடுபட்ட போராட்டத்தை ஒரு தரப்பினர் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.
கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி காலை காலி முகத்திடல் போராட்ட களத்தில் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காலையில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். தவறான ஆலோசனைகளுக்கு மத்தியில் தான் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கஞ்சிபான் இம்ரான் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.பயணத்தடை ஊடாகவே நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்கியது.இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதை இந்திய புலனாய்வு பிரிவு அறிவிக்கும் வரை எமது நாட்டு புலனாய்வு பிரிவ அறிந்திருக்கவில்லை.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை இந்திய புலனாய்வு பிரிவினரே முன்கூட்டியதாக அறிவித்தனர். ஆகவேகஞ்சிப்பானைஇம்ரான் நாட்டை விட்டு தப்பிச் சென்றதையிட்டு தேசிய புலனாய்வு பிரிவின் திறன்நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம் என எவ்வாறு குறிப்பிடுவது.
நாட்டை விட்டு தப்பிச் சென்ற கஞ்சிப்பானை இம்ரானை தேடி வெளிநாடுகளுக்கு புலனபாய்வு அல்லது பாதுகாப்பு தரப்பினர் செல்வது நாட்டுக்கு பிறிதொரு கறுப்பு புள்ளியாக அமைவதுடன் மக்களின் வரி பணத்தை வீண்விரயமாக்கும் செயற்பாடாக கருதப்படும்.
ஆகவே கஞ்சிப்பானை இம்ரான் நாட்டை விட்டு வெளியேறும் அளவிற்கு அலட்சிபோக்குடன் செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கஞ்சிபான் இம்ரான் விவகாரத்தில் தேசிய புலனாய்வு பிரிவு,பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பின் செயற்பர்டுகளுக்கு இந்த உயரிய சபை ஊடாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்கிறேன் என்றார்.

