உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் இறுதி துருப்பு எது?

188 0

25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவ தனியார் சட்டமூலத்தை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் இறுதி துருப்பாக பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் 06 மாத காலத்திற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சமர்ப்பித்த தனிப்பட்ட பிரேரணையை பிற்போட்டு விட்டு,கடந்த நவம்பர் மாதம் ஆளும் தரப்பினர் சமர்ப்பித்த தனிப்பட்ட பிரேரணையை நிறைவேற்ற அவதானம் செலுத்தப்படுகின்றமை முறையற்ற மற்றும் வெறுக்கத்தக்க செயல்பாடாகும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் சுட்டிக்காட்டினார்.

முட்டாள்தனமான விடயங்களை காட்சிப்படுத்தி தவறானவற்றை குறிப்பிட வேண்டாம்.பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசனை கடுமையாக சாடினார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை (05) பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற போது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை  கொண்டு தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான தனிப்பட்ட பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் 6 மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தனிப்பட்ட பிரேரணையை சமர்ப்பித்தார்.ஆளும் தரப்பின் உறுப்பினர் தொலவத்த கடந்த நவம்பர் மாதம் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்தார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்த தனிப்பட்ட பிரேரணை தொடர்பில் அவதானம் செலுத்தாமல் ஆளும் தரப்பின் உறுப்பினர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் இறுதி துருப்பாக 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவ சட்டமூலத்தை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதன்போது எழுந்து கருத்துரைத்த பிரதமர் தினேஷ் குணவர்தன முட்டாள்தனத்தை காட்சிப்படுத்தி,தவறான விடயங்களை குறிப்பிட வேண்டாம்.இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,ஆகவே தறவான விடயங்களை குறிப்பிட வேண்டாம் என கடுமையாக சாடினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் உறுப்பினர் தொலவத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவ சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.

எனது தேர்தல் வாக்குறுதியில் 25 சதவீதத்தால் இளைஞர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தேன்,ஆகவே பொறுப்பான முறையில் கருத்துக்களை குறிப்பிடுங்கள் என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசனிடம் குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்.பிரிவெனா கல்வி முறைமை தொடர்பில் பல மாதங்களுக்கு முன்னர் தனிப்பட்ட பிரேரணையை சமர்ப்பித்தேன்,ஆனால் இதுவரை இந்த பிரேரணை பாராளுமன்ற நிலையியல் புத்தகத்தில் உள்வாங்கப்படவில்லை.

ஆனால் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட பிரேரணையை நிறைவேற்ற ஆளும் தரப்பு அவதானம் செலுத்தியுள்ளது,உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயல்படுகிறது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் உறுப்பினரான நிமல் லன்ஷா தேர்தலை பிற்போடும் நோக்கம் எமது ஜனாதிபதிக்கும் ,அரசாங்கத்திற்கும் கிடையாது.இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான தனியார் சட்டமூலத்தை கொண்டு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் தேவையற்ற பிரச்சினையை தோற்றுவிக்கிறார்கள் என்றார்.