மணிப்பூரில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு – பிரதமர் வருகையால் பாதுகாப்பு அதிகரிப்பு

494 0

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 4 மற்றும் 8ஆம் 8ஆம் திகதிகளில் நடக்கிறது. இதில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார்.

இம்பால் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட லாங்ஜிங் அச்சவுபா மைதானத்தில் இந்த பிரசார கூட்டம் நடக்கிறது.

பிரதமரின் இந்த பயணத்துக்கு அங்குள்ள கிளர்ச்சியாளர் குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

மணிப்பூர் மக்களை பிரதமர் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ள இந்த குழுவினர், பிரதமரின் வருகையை எதிர்த்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளன.

இதனால் மாநிலம் முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் நேற்று 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

அச்சவுபா மைதானத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள நிங்கொம்பம் பகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஒருவரின் வீடு அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு ஒன்று சிக்கியது.

இதைப்போல தவுபல் மாவட்டத்தில் ஒரு பா.ஜனதா தொண்டரின் வீடு அருகிலும் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.