மின்கட்டண திருத்தம் தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தை குப்பை தொட்டியில் போட்டு விட்டு, மின்கட்டமைப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வுகாண சிறந்த ஒருவரை மின்சாரத்துறை அமைச்சராக நியமிக்குமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனையை திங்கட்கிழமை (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
பலரது எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ள மின்கட்டண அதிகரிப்பு யோசனையை அமைச்சரவை ஒருவார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
நாட்டில் சட்டம் என்பதொன்று உள்ளது.கட்டண அதிகரிப்பு மற்றும் கட்டணம் குறைப்பு தொடர்பில் நிறுவன மட்டத்தில் ஒரு வரைபு காணப்படும்.
மின்சார கட்டணத்தை அமைச்சரின் விருப்பத்திற்கு அமைய அதிகரிக்க முடியாது.மின்சாரம் தொடர்பான அதிகாரம் அரசியமைப்பின் பிரகாரம் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.
மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட 4 பிரதான கோரிக்கைகளை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்வைத்தோம்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இந்த யோனைகளை பரிசீலனை செய்து மக்கள் கருத்துக்களை கோரிய பின்னர் எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடபட்டது.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் 229 சதவீத மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க முடியாது.
நாளாந்தம் மின்விநியோக துண்டிப்பு மற்றும் எரிபொருள் பயன்பாடு முகாமைத்துவம் ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டு மின்கட்டணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதி வழங்கலாம் என ஆணைக்குழு குறிப்பிட்டது,இதற்கமைய மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க மின்சாரத்துறை அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளார்.
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேவை இல்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்ததை தொடர்ந்து ஆணைக்குழுவிற்கு எதிராக மின்கட்டணத்தை அதிகரிக்கும் செயற்பாடுகளில் அமைச்சர் ஈடுப்படுகிறார்.
மின்சாரத்துறை அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தை கிழித்து குப்பை தொட்டியில் போடுவது சிறந்தது.
மின்சாரததுறை சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண சிறந்த ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றார்.

