சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர் மற்றும் 9 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஓய்வுபெறும் நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன.
இதனால் பொலிஸ் திணைக்களத்துக்குள் பதவிப் போட்டி தீவிரமடைந்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் 2ஆவது உயர் பதவியாக கருதப்படும் பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய நந்தன முனசிங்க மற்றும் ஊவா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எப்.யூ. பெர்ணான்டோ ஆகியோர் 2022ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றனர்.
அத்துடன், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகஸ்டஸ் பெரேரா, வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அழகக்கோன், வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜித்த குணரத்ன, சமூக பொலிஸ் மற்றும் காப்புறுதிப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார, கேகாலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன, பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலால் அபோன்சு, களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.டி.எஸ்.சி. சந்தநாயக்க, நுவரெலியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.எஸ்.என். பீரிஸ், மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரஷாந்த ஜயகொடி ஆகியோர் 2022ஆம் ஆண்டுடன் ஓய்வுபெறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாவர்.
இவ்வாறான நிலையில், இதனை மையப்படுத்தி கடந்த வாரம் (டி.30), பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விஷேட பிரியாவிடை வைபவம் ஒன்று நடந்தது.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன,
இன்னும் மூன்று மாதங்களில் தான் ஓய்வுபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனக்கு பதவி நீடிப்பு கிடைக்குமா என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தனது ஜாதகத்துடன் சாஸ்திரக்காரர்களை சந்தித்துள்ளமை தொடர்பிலும் அவர் இதன்போது சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பதவி தானாக வர வேண்டும் எனவும் அரசியல், சிபாரிசுகளின் ஊடாக அதனை அடையக் கூடாது எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதனிடையே, தற்போது வெற்றிடம்னகியுள்ள பொலிஸ் திணைக்களத்தின் 2ஆவது உயர் பதவியான பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பாக, சிரேஷ்டத் துவத்தில் முன்னணியில் உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கபப்டுகின்றது.
அவருக்கு அடுத்த நிலையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் உள்ளனர்.
இந் நிலையில் இம்மூவரில் ஒருவர் பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவர் என் தெரிகின்றது.

