நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் நான் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்றால் தண்டனை ஏற்க தயார். குற்றச்சாட்டு உண்மையாயின் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதவி விலக வேண்டும் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள மக்கள் பேரவை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நிலக்கரி விலைமனு கோரல் தொடர்பில் நான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததால் நிலக்கரி கொள்வனவில் தாமதம் ஏற்பட்டு மின்னுற்பத்தி கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் அடிப்படையற்றது.
நிலக்கரி விலைமனுக்கோரல் ஊடாக பாரிய நிதி மோசடி இடம்பெற இருந்தது,நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் நிலக்கரி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுக்கோரலை கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி மீள ஏன் பெற்றுக் கொண்டார்.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் அரச நிதி மோசடிகளுக்கு குறையேதும் இல்லை.நிலக்கரி கொள்வனவில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்.
நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் நான் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்றால் தண்டனை ஏற்க தயார்,குற்றச்சாட்டு உண்மையாயின் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதவி விலக வேண்டும் என்றார்.

