தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முடியாது – வினோ எம்.பி

497 0

ற்போது இருக்கின்ற தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முடியாது. தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட விரும்பினால், அவர்கள் போகட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ரெலோவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சமத்துவ கட்சியின் வன்னிக்கான அலுவலகத் திறப்பு விழாவில் நேற்று (டிச. 28) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அண்மைக் காலங்களில் நான் சர்ச்சைக்குரிய விடயங்களில் அகப்பட்டு வருகிறேன். சிலர் சில அறிவுரைகளை கூறுகிறார்கள். ஆனாலும், சிலர் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

வன்னி மாவட்டத்தில் புதிதாக ஒரு கட்சி காலூன்றுகிறது. நானும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவன் என்ற வகையில் எனது கட்சிக்கும் அந்தக் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அந்தப் போட்டிக்கு எங்களுடன் மோதுவதற்கு தயாரான கட்சியின் நிகழ்வில் கலந்துகொண்டு அந்தக் கட்சிக்கு ஆதரவான கருத்தை சொல்லிவிட்டு, போட்டி ஏற்படுகிற போது அதன் தாக்கத்தை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்தேன்.

அசோக் தோழர் (சந்திரகுமார்) பல கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பார். ஆனால், இங்கு இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களே வந்துள்ளார்கள். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான் ஒருவன் மட்டும் இருக்கின்றேன். வடக்கு கட்சி தலைவர்களும் இல்லை.

ஒரு காலத்தில் நானும் சந்திரகுமார் அவர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக, உரிமைக்காக சம காலத்தில் ஆயுதமேந்திப் போராடியவர்கள். அந்தப் போராட்டத்தின் வலி அல்லது  விடுதலை இலக்கையடைய முழு மூச்சாக செயற்பட்டவர்கள். நாங்கள் அரசியலுக்கு வருவோம் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால், எமது போராட்டங்களில் கடந்த காலங்களில்  இடம்பெற்ற கசப்பான சில நிகழ்வுகளால் நாங்கள் அரசியலுக்குள் நுழைவது, பாராளுமன்றத்துக்குச் செல்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

என்ன நோக்கத்துக்காக நாங்கள் புறப்பட்டோமோ, அந்த நோக்கம்  நிறைவேறவில்லை. அந்த நேரத்தில் அரசியல் விடுதலையை தனி நாடு என்று எண்ணியிருந்தாலும் கூட, அதற்கு பிறகு தமிழ் மக்களின் விடுதலை மற்றும் சுதந்திரம், அரசியல் விடுதலை என்பவற்றை பெற வேண்டுமெனில், நாங்கள் இப்போராட்ட களத்தை விட்டு விலகிச் செல்ல முடியாத ஒரு சங்கடத்துக்குள் தான் இருக்கின்றோம்.

இதன் காரணமாக தான் சந்திரகுமார் அவர்கள் இந்த கட்சியை பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் உருவாக்கி, கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியாக சவால் மிக்க ஒரு கட்சியாக வளர்த்துள்ளார். அதனை நான் மறுக்கவல்லை.

அரசியல் ரீதியாகவும் போட்டிகள் இருக்க வேண்டும். அதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அந்த போட்டியின் இறுதி இலக்கு, மக்களின் விடுதலையாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் தற்போது ஒரு ஐயப்பாடு இருக்கிறது. தமிழ் மக்கள் மத்தியில் கட்சிகள் அதிகரித்துச் செல்கின்றன.

தமிழ் தேசியம் என பெயரளவில் இயங்கிக்கொண்டிருக்கும் சில கட்சிகளுக்கு கூட தேர்தல் திணைக்களம் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், சமத்துவ கட்சி பதிவு செய்யப்பட்டுவிட்டது. அங்கீகாரம் பெற முடியாத நிலையில் நாம் இருக்கிறோமெனில்,  இவ்வாறான கட்சிகளின் அதிகரிப்பு தேவையா?

ஒரு காலத்தில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டவர்களாவர். இன்று திடீரென ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்சி. நான் கூட புதிய கட்சியை தொடங்கினால், எனக்கும் அங்கத்துவம் கிடைக்கும்; பேச்சுவார்த்தையில் தலைவராக நானும் கலந்துகொள்ள முடியும்.

இன்று கூட்டமைப்பில் இருந்து விலகியவர்கள் பல கட்சிகளாக செயற்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தல் வரப்போகிறது; மீண்டும் தேர்தலில் இணைந்து போட்டியிடலாம் என சிலர் எடுக்கின்ற முயற்சிகளை தடுக்கவும் சிலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

தமிழ் தேசியக் கட்சித் தலைவர்கள் இணைந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட இணக்கம் என ஒரு பத்திரிகைச் செய்தி வருகிறது. மறுநாளே, பேச்சு முறிவு; இன்னுமொரு கட்சி சம்மதிக்கவில்லை என மற்றொரு செய்தி வெளியாகிறது.

தமிழர் தரப்பில் தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் இருக்கும் ஒரு சாபக்கேடு இதுதான்.

எங்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் அரசியல் கட்சிகள் தத்தமது சுய லாபங்களுக்காக செயற்படுகின்றனவே தவிர, ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக செயற்படவில்லை.

எல்லோரும் இணைந்துவிட்டதாக சிலர் கருதுகின்றனர். எனினும், நிச்சயமாக நாங்கள் இணையப் போவதில்லை. இதனால் தமிழ் மக்களுக்கான தீர்வினை தமிழ் கட்சித் தலைவர்கள் ஊடாக எதிர்பார்க்க முடியாது.

நாங்கள் இப்போதும் பிரிந்தே இருக்கிறோம். மாகாண சபைகள் ஊடாக அதிகாரங்களை பெற்று, அவற்றை அரசாங்கத்திடம் இருந்து தட்டிப்பறித்து, செயற்படுத்த வேண்டும் என கூறினார்கள்.

அதைக் ‍கொண்டு எங்கள் மத்தியில் உள்ள ஒரு கட்சியினர், பிரச்சாரம் செய்தவாறு, மாகாண சபைக்கு எதிராக எழுச்சி ஊர்வலம் நடத்துகிறார்கள்.

அப்படியானால், பெரும்பான்மை தரப்பு எமக்கு தீர்வினை தருமா? மாகாண சபை வேண்டும் எனவும் ஒரு சாரார் கேட்கின்றனர். இன்னுமொரு சாரார், வேண்டாம் என தமிழ் மக்களைக் கொண்டு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை நடத்துகிறார்கள்.

அவ்வாறிருக்க, நாங்கள் எப்படி தீர்வினை பெற்றுத்தர முடியும் என அவர்கள் கேட்பர்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை வழங்க வேண்டுமென்றால், அதை தடுப்பதற்கு பெரும்பான்மை தரப்புக்கள்  அனைத்தும் ஒன்றுபடக்கூடும். எனினும், நாங்கள் ஒன்றுபடப் போவதில்லை. இத்தகைய நிலையே தற்போது காணப்படுகிறது.

சில கட்சிகள் பிரிந்து செல்வதற்கு ஜனநாயக தன்மை கட்சிகள் இல்லாமையே காரணம். இங்கு உட்கட்சி ஜனநாயகம் இல்லை. உட்கட்சி விமர்சனங்கள் தடுக்கப்படுகின்றன.

நான் எனது கட்சிக்குள் இருந்து கூட்டமைப்பை விமர்சிப்பதுண்டு. கூட்டமைப்பு பலப்பட வேண்டும் என்பதற்காகவே விமர்சிக்கின்றேன். கூட்டமைப்பு சிதைக்கப்பட வேண்டும் அல்லது இல்லாதொழிய வேண்டும் என்பதற்காக விமர்சிக்கவில்லை.

கட்சியை பலவீனப்படுத்தவே சிலர் கூட்டமைப்பில் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அனுசரணையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதை விரும்பாதவர்களும் கூட்டமைப்புக்குள் இருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் கூட்டமைப்பு பலவீனப்படுவதையே விரும்புகிறார்கள்.

எனினும், கூட்டமைப்பு உருவாகிறபோது நாம் அதில் ஓர் அங்கமாக இருந்தோம். அதன் உருவாக்கத்துக்கு நாங்களும் ஒரு காரணம்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அப்போதிருந்தே இயங்குகிறது. நான்கு கட்சிகள் அப்போது இருந்தபோதும், இன்று தமிழீழ விடுதலை இயக்கம் மட்டுமே இருக்கிறது.

ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டனி, சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இப்போது இல்லை. எனினும், நாங்கள் மட்டுமே இருக்கிறோம்.

கூட்டமைப்பு என்ன நோக்கத்துக்காக  உருவாக்கப்பட்டதோ, அந்த இலக்கை அடையும் வரை கூட்டமைப்பை எக்காரணம் கொண்டும்  அழித்துவிட முடியாது. தமிழீழ விடுதலை இயக்கம் அந்த விடயத்தில் உறுதியாக நிற்கிறது.

கூட்டமைப்பை விமர்சிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. எனினும், நாங்கள் தீர்வினை இதுவரை எட்டவில்லை. மேலும், கூட்டமைப்பை நாம் பலப்படுத்த நினைக்கிறோம், சிலர் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.

இனிவரும் தேர்தலில் தாங்கள் தனித்து போட்டியிட விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். தமிழரசு கட்சியில் பெரும்பாலானவர்கள் தனித்து போட்டியிட விரும்புவதாக கூறுகிறார்கள். அவர்கள் விரும்பினால் போகட்டும். அவர்களுக்கு அக்கறையில்லை. அக்கறை இருந்தால், கூட்டமைப்பாக செயற்பட வேண்டும்.

போராட்ட காலத்தில் கூட பல இயக்கங்கள் இருந்தன. அதனால் பல கட்சிகள் உருவாகுவது புதிய விடயமல்ல. தற்போது கட்சிகள் பெருகிவிட்டன. சில கட்சிகளில் பெயருக்கு ஜனநாயகம் இருக்கும். ஆனால், செயற்பாட்டு ரீதியாக ஜனநாயகம் என்பதே இருக்காது.

இலங்கை தமிழரசு கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்பதால், ஜனநாயக தமிழரசு கட்சி என்றொரு கட்சி உருவானது. அந்த கட்சி இன்று காணாமல் போய்விட்டது. சிவகரன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்றோர் அதை உருவாக்கினர். அனந்தி, ஐங்கரநேசன் பிரிந்து தனித்தனித் கட்சிகளை வைத்துள்ளனர். இவையனைத்தும்  சாபக்கேடு.

தமிழ் தலைவர்கள் தீர்வினை பெற்றுத்தருவர் என தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஒருபோதும் அது நடக்காது.

இப்போதுள்ள தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தர முடியாது. இப்போதுள்ள சிங்கள தலைவர்களாலும் பேச்சின் மூலம் தீர்வினை காண முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கபடத்தனத்தோடு பேசுகிறார். பேச்சுவார்த்தை நடந்தது. அடுத்த பேச்சுக்கு திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழர் தரப்பில் இருந்து ஒரு கட்சியை வலிந்து இழுத்து தனித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழர் என்ற ஒரே தரப்பாக நின்று அரசாங்கத்துடன் பேசவேண்டும். அந்த பேச்சு தான் வெற்றியளிக்கும். பல தரப்புகளாக சென்றால், தீர்வினை பெற முடியாது.

கட்சிகள் பிரிவது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு. சமத்துவக் கட்சி கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஏன் இணைந்து செயற்படக் கூடாது?

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நீங்கள் கூட்டமைப்பிலும் அங்கத்துவம் பெற முடியும். ஒற்றுமையை தான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். ஒன்றுபட்டால் தான் காலம் தாழ்த்தியேனும், தீர்வு கிடைக்கும்.

மக்களது பிரச்சினைகளை எங்களால் தீர்க்க முடியாமல் உள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இதற்கு நான் வெட்கப்படுகிறேன். பொருளாதார நெருக்கடிக்கு கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து அரசை விமர்சித்ததன் காரணமாக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், நாங்கள் துரோகம் செய்யவில்லை என தெரிவித்தார்.