நத்தார் வழிபாட்டுக்காக தேவாலயத்திற்கு சென்று திரும்பியவேளை, யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் உயிரிழந்துள்ள நிலையில், மகள் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பகுதியை சேர்ந்த சோதிலிங்கம் நாகேஸ்வரி (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (டிச. 25) நத்தார் வழிபாட்டிற்காக இருபாலை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்று, மகளுடன் மோட்டார் சைக்கிள் பின் இருக்கையில் அமர்ந்து வீடு நோக்கி சென்றவேளை, தாயின் சேலை மோட்டார் சைக்கிள் பின் சில்லுக்குள் அகப்பட்டுக்கொண்டதால், தூக்கி வீசப்பட்டார். அதேவேளை, மகளும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தமையால் விழுந்து காயங்களுக்குள்ளானார்.
விபத்துக்குள்ளானதில், தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

