புலம்பெயர்வோர் தொடர்பில் சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

221 0

சட்டவிரோதமாக வரும் புலம்பெயர்வோர் தொடர்பில் ஒவ்வொரு நாட்டிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது போன்று சர்வதேச ரீதியிலும் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியமானதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற புலம்பெயர்வோர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசனை மாநாட்டின் நிறைவு நிகழ்வில் நேற்று பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டபூர்வமாக வருகைதரும் புலம்பெயர்வாளர் நாட்டுக்கு ஆசீர்வாதம் என்பதுடன், சட்டவிரோத புலம்பெயர்வோர் நாட்டில் சுகாதார, சமூக, அரசியல் பிரச்சினைகள் பலவற்றை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தொடர்பான பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இப்போது முன்னுரிமை அளித்து செயற்படுவதற்கு அதுவே காரணமென குறிப்பிட்ட ஜனாதிபதி, வருடாந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் மாநாடுகளுக்கு செல்லும் போதும் அதனோடிணைந்த கலந்துரையாடல்களிலும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் சுகாதாரம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் தான் தனிப்பட்ட கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட கொழும்பு பிரகடனத்தின் நோக்கங்களை அடைவதற்காக அனைத்து அங்கத்துவ நாடுகளும் பாடுபடுமென நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

19 நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது.

2008 ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் சுகாதார மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கமைய ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் புலம்பெயர்ந்தோர் சுகாதாரம் தொடர்பான கொள்கையை தயாரித்து அமுல்படுத்த உடன்பட்டன.

இந்த பிரேரணைக்கு மிகவும் அக்கறையுடன் பதிலளித்த இலங்கை, புலம்பெயர்வாளர்களுக்கான சுகாதார கொள்கை தயாரிக்கப்பட்ட முதலாவது நாடாகவும், தனியொரு நாடாகவும் மாறியுள்ளது. அந்த அக்கறையான பிரதிபலிப்புக்கு கௌரவமளிக்குமுகமாக புலம்பெயர்ந்தோர் சுகாதாரம் தொடர்பான இரண்டாவது சர்வதேச ஆலோசனை மாநாடு இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம, உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மருத்துவ கலாநிதி பூனம் பெத்ரபால் சிங், புலம்பெயர்வோர் தொடர்பான சர்வதேச அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் மருத்துவ கலாநிதி நெநெட் மோட்டஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.