2023ஆம் ஆண்டு எமக்கு மிக முக்கியமான ஆண்டாகும். இலங்கையின் 75ஆவது சுதந்திர தினமும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஆண்டாகும்.
இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தியை மையமாகக் கொண்டு பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரஜா சக்தி பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகையை காண நிதியத்தின் நிதி உதவியோடு ‘சேவ் த சில்ரன்’ (Save The Children) அமைப்பு மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை மற்றும் மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்டம் என்பவற்றின் ஏற்பாட்டில் பாரத் அருள்சாமியின் வேண்டுகோளுக்கிணங்க, கண்டி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான சுகாதார பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு செயற்றிட்டமாக தெல்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய பெருந்தோட்ட மற்றும் கிராமபுறப் பகுதிகளில் வாழும் பெண்களுக்கு அண்மையில் சுகாதாரப் பொதிகள் வழங்கப்பட்டன.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாரத் அருள்சாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக பெண்கள் தங்களது குடும்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தங்களது சுகாதாரத்தை பேணுவதிலும், பாதுகாப்பு வசதிகளை பெறுவதிலும், பிள்ளைகளது கல்வியை முன்னகர்த்துவதிலும் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.
எனவே, 2023ஆம் ஆண்டினை தொழில் முனைவோருக்கான ஆண்டாக மாற்ற பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம். அதேவேளை மாணவர்களது எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் போதைப்பொருளுக்கு எதிரான பல வேலைத்திட்டங்களையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.

இது தொடர்பாக காவல்துறையினரும் இலங்கை இராணுவத்தினரும் எமக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர்.
போதைப்பொருளை கொண்டு வரும் விஷமிகளிடமிருந்து எமது சிறுவர்களை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தாலே இதனை தடுத்து நிறுத்த முடியும்.
எமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய வம்சாவளி மக்கள் பொருளாதார ரீதியில் பலமடைய பல வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
இந்நிலையில் பெண் தலைமைத்துவத்தை, எதிர்வரும் தேர்தல்களில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையினை பெருக்கவும், விசேட திட்டங்களை உள்வாங்கியுள்ளோம் என தெரிவித்தார்.
மேலும், சுகாதார பொதிகள் வழங்கும் இந்த நிகழ்வில் தெல்தோட்ட பிரதேச செயலாளர் திருமதி.ஆத்மா, பிரதேச செயலக அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பிரஜா சக்தி அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



