தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமனம்

217 0

ள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், சகல நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள், உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 262ஆவது அத்தியாயத்தின் பிரகாரம், புதன்கிழமை (டிச. 21) இரவு தேசிய தேர்தல் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் 4(1)ஆம் பிரிவின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சர்ச்சை நிலவும் சூழலில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நகர சபை மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை மூன்றாண்டு காலத்துக்கும் அதிகமாக பிற்போட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை ஓரிரு மாதத்துக்கு பிற்போடுவதால் ஏதும் மாற்றமடையாது.

ஆகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டின் முதல் காலாண்டில் நடத்துவது சாத்தியமற்றது என ஆளும் தரப்பு குறிப்பிடுகிறது.

உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கத்தில் அரசாங்கம் எல்லை நிர்ணய குழுவை நியமித்துள்ளது என எதிர்த்தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம், உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால், இன்னும் ஆறு மாத காலத்துக்கு தேர்தலை பிற்போட நேரிடும் என தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

பொதுச்சட்டம் மற்றும் அடிப்படை கோட்பாடுகளுக்கு அமைய உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எம்.ஏ.சுமந்திரன், தயாசிறி  ஜயசேகர, ரஞ்சித் மத்தும பண்டார, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

எதிர்க்கட்சியின் உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட இரு ரிட் மனுக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.