ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தனது கட்டிடத்தை வழங்கிய இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுகிறார்.
இவரது தனிப்பட்ட கருத்தை ஆணைக்குழுவின் நிலைப்பாடாக கருத வேண்டாம் என ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என வலுசக்தி மற்றும் மின்சக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
வலுசக்தி மற்றும் மின்சக்தி துறை அமைச்சில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தனது கருத்துக்களை அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.
இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரைக்கு அமைய கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை.ஆணைக்குழுவின் தலைவர் தனது விருப்பத்திற்கு அமைய மின்கட்டணத்தில் திருத்தம் செய்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் கடனை செலுத்துவதற்காக மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுவது அடிப்படைற்றதாகும்.அடுத்த ஆண்டுக்கான மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோகத்திற்கான செலவை மதிப்பிட்டே மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
மின்கட்டண அதிகரிப்பு எதிரான கருத்துக்களை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடுகிறார்.
இவரின் தனிப்பட்ட கருத்துக்களை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்,ஆகவே இவரது கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை கிடையாது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளுக்கு தனது கட்டிடத்தை வழங்கிய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தற்போது அரசியல் நோக்கத்திற்காக தனது பதவியை பயன்படுத்திக் கொள்கிறார்.
எதிர்வரும் காலங்களில் அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிட முடியும்.
ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒருமித்த வகையில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் இவர் மத ஸ்தலங்களுக்கு மாத்திரம் 300 முதல் 400 மில்லியன் ரூபா வரை கட்டண நிவாரணம் வழங்கியுள்ளார்.
தனது அரசியல் எதிர்கால திட்டமிடலுக்காக சுயாதீன ஆணைக்குழுவின் பதவியை பயன்படுத்துவது முறையற்றதாகும் என்றார்.

