பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலையுடன் அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் தொடர்புபட்டிருக்க வேண்டும் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதுஅவரை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு மூலங்கள், சி.சி.ரி.வி. உள்ளிட்ட அறிவியல் தடயங்களை வைத்து விசாரணையாளர்கள் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தும் நிலையில், குற்றவாளிகளைக் கைதுசெய்ய அறிவியல் தடயங்களை தொடர்ச்சியாக பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.
இந் நிலையில், வர்த்தகர் ஷாப்டரின் பிளவர் வீதி வீட்டுக்கும் பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை பகுப்பாய்வு செய்யும் போது மற்றொரு முக்கிய விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிளவர் வீதியிலிருந்து காரை செலுத்தி வந்துள்ள தினேஷ் ஷாப்டர், இடையில் ஒரே ஒரு இடத்தில் காரிலிருந்து இறங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரபல உணவகம் ஒன்றில் அவர் இவ்வாறு இறங்கியுள்ளமையும் அங்கிருந்து நேராக பொரளை மயானத்துக்கு சென்றுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் அப்போது உணவகத்தில் எவரையேனும் சந்தித்தாரா அல்லது அங்கிருந்து அவருடன் எவரேனும் காரில் ஏறிச் சென்றனரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதனைவிட, பிளவர் வீதி முதல் பொரளை கனத்தை வரை ஷாப்டரின் வாகனம் பயணித்த போது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து பயணித்த வாகனங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டி.ஜி.எச். பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் பொரளை பொலிஸார் விடயங்களை முன் வைத்து 4 தொலைபேசி இலக்கங்கள் குறித்து விரிவான தொலைபேசி விபரப் பட்டியலை பெற்றுக்கொள்ள நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

